2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு கூடுதல் நிதி: நஜீப் ஏ.மஜீத்

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்)

கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசாங்கத்தினால் இவ்வருடம் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.
 
திருகோணமலை வரோதைய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் பணிமனையில் மாகாண அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான விசேட கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்...
 
இன்றைய கூட்டமானது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதுவரையில் மாகாண திட்டமிடல் குழு மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பான கூட்டங்களைத்தான் நாம் நடாத்தி இருக்கின்றோம். ஆனால் இந்தக் கூட்டமானது இவைகளில் இருந்து வேறுபட்டது. மக்கள் பிரதிநிதிகள் அரச உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் எல்லோரும் இணைந்து நமது மாகாணத்தில் வாழுகின்ற ஏறக்குறைய 17 இலட்சம் மக்களின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் அவர்களது வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீர்மானங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் முடிந்தவரையும் தீர்க்கின்ற, தீர்வு கான்கின்ற ஒரு மன்றமாகவும் இதனை நடாத்துவதற்கே நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 
 
வழமையான விமர்சிப்பு மற்றும் முன்னேற்ற விமர்சனம் என்பதற்கு அப்பால் இந்த மாகாண சபையில் இருக்கின்ற 05 அமைச்சுக்கள் மற்றும் 19 திணைக்களங்கள் என்பவற்றின் ஊடான செயற்பாடுகளும் அவற்றின் ஊடாக மக்களுக்கு வழங்குவதற்காக திட்டம் இடப்பட்டுள்ள சேவைகள் உரிய முறையில் வழங்கப்படுகின்றனவா என்பதை ஆராயவும் இவற்றைச் செய்வதில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை காண்பதுமே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
 
ஏனெனில் இந்த நாட்டின் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை மற்றும் பிரதேச சபை, நகர சபை தவிசாளர்கள் அதன் உறுப்பினர்கள் என்போர் மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ளனர். அது அவர்களின் தலையாக பொறுப்பாகும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள 03 மாவட்டங்களிலும் இவ்வாறான கூட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன் முதலாவது கூட்டமே இன்று திருகோணமலை மாவட்டத்தினை மையப்படுத்தி இன்று நடைபெறுகின்றது. இதன் பிறகு ஏனைய இரண்டு மாவட்டங்களிலும் இவ்வாறான கூட்டங்களை மிக விரைவில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
 
நமது மாகாணம் யுத்தத்திற்குப் பிறகு கல்வி, சுகாதாரம், விவசாயம், சுற்றுல்லா வீதி அவிருத்தி மற்றும் ஏனைய துறைகள் சார்ந்த செயற்பாடுகளில் நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களுடன் போட்டிபோட்டு முன்னேறி வருகின்றமையை நாம் அறிவோம். இந்த அபிவிருத்திகளுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் நமது அமைச்சுக்களும், திணைக்களங்களும் முடிந்தளவு கிடைக்கும் வளங்களுடன் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன என்பதே எனது கருத்தாகும்.
 
இதற்குத் தலைமை வகிக்கும் கௌரவ அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் அமைச்சின் செயலாளர்களும், திணைங்களத் தலைவர்களும் வழங்குகின்ற ஒத்துழைப்புக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல் எதிர்காலத்தில் இம் மாகாணத்தின் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் தியாகத்துடனான பங்களிப்பை உங்கள் அனைவரிடம் இருந்தும்  எதிர்பார்க்கின்றேன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X