-எம்.பரீத்
திடீரென கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து திருகோணமலை ஆதாரவைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய் ஒருவரை இடமாற்றம் செய்ய முயற்சித்தபோது கிண்ணியா வைத்தியசாலை வளாகத்திலயே அம்புலன்ஸ் வண்டியில் பிரசவம் நடைபெற்றுள்ளது.
இது பற்றி சம்பந்தப்பட்டவரின் உறவினர் கருத்து தெரிவிக்கையில், நேற்று நண்பகல் 12.30 மணியளவில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு வைத்திய பரிசோதனை நடைபெற்றது. இதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையளவில் சுகப் பிரசவம் நடைபெறும் என வைத்தியர் கூறியதாகவும் இறுதி நேரம்வரை கிண்ணியா வைத்தியசாலையில் வைத்துவிட்டு மாலை 5.30 மணியளவில் திடீரென திருமலைக்கு இடமாற்றம் நடைபெற போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் CTG Paper தீர்ந்து போயுள்ளதாகவும், இரவு நேர கடமைபுரியும் தாதி விடுமுறை எனவும் கூறப்பட்டுள்ளது.
12.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளியை மாலை 06 மணிக்கு சுகப்பிரசவம் கிடைக்கும் எனக் கூறிவிட்டு மாலை 5.30 மணிக்கு அம்புலன்ஸ் வண்டியில் பிரசவவலி அதிகரித்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றுவது நியாயமா?
வைத்தியசாலை வளாகத்தில் அம்புலன்ஸ் வண்டியில் சுகப் பிரசவம் நடைபெற்ற பின்பு குழந்தை மாத்திரம் Labour Roomஇற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சுமார் ஒரு மணி நேரம் அம்புலன்ஸ் வண்டியில் மருத்துவச்சியைத் தவிர தாதியோ, வைத்தியரோ அம்புலன்ஸ் வண்டிக்குள் வந்து தாயை கவனிக்கவில்லை என்றும் இதற்கு காரணம் திருகோணமலைக்கு மாற்றப்பட்டவரை மீண்டும் கிண்ணியா வைத்தியசாலைக்குள்ளே எடுக்க மகப்பேற்று மருத்துவர் அனுமதி வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்பு திருமலையில் இருந்து மருத்துவர் வரவழைக்கப்பட்டதன் பின்பே தாயின் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ஏனைய பரிசோதனை நடைபெற்றுள்ளன.
தாய்க்கு சுகப்பிரசவம் என்பதால் தாயும் குழந்தையும் இறைவனின் அருளால் உயிர் தப்பி உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களும், பொதுமக்களும் கருத்து தெரிவித்தனர்.
கிண்ணியா வைத்தியசாலையில் பௌதீக ஆளனி தட்டுப்பாடு அதிகம் உள்ளதாகவும் தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதும் இன்னும் மாவட்ட வைத்தியசாலைக்கான வசதிகளுடன்தான் இயங்குவதாகவும் வைத்தியர்கள் கூறுகின்றனர். எது எவ்வாறு இருந்தாலும் மனிதாபிமானத்துடனும் பொறுப்புடனும் கடமை புரிவது வைத்தியர்களின் கடமையல்லவா?
கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகளையும், கவனயீனத்தையும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கவனம் எடுப்பார்களா?