.jpg)
-வடமலை ராஜ்குமார், எஸ்.சசிக்குமார்
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் முன் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. கோணேசபுரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர்களே மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது வீடுகளில் வாடகைக்கு உள்ளவர்கள் சிலர் கோணேசபுரி கிராம சேவகர் எஸ்.சதீஸ்வரனை தாக்கியுள்ளனர் என்றும் தற்போது அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைதி செய்யுமாறும் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் மற்றும் அவ் வீடுகளில் இருந்து வாடகை குடியிருப்பாளர்களை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி மற்றும் உதவி அரசாங்க அதிபர் அருள்ராசா மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு பிரசன்னமாகி இருந்தனர்.
மக்களின் கோரிக்கைகளை கேட்டரிந்த இவர்கள், உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் நாளை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய இருப்பதாகவும் உப்புவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். அத்துடன் கிராம மக்களின் பாதுகாப்பிற்கும் தாம் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.