2026 மார்ச் 30, திங்கட்கிழமை

திருமலையில் நாளொன்றுக்கு நால்வர் தற்கொலை முயற்சி: சி.நந்தகுமார்

Menaka Mookandi   / 2014 ஜூலை 16 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் நுண்கடன்; திட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு மூவர் அல்லது நால்வர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என திருகோணமலை நகரசபை உறுப்பினர் சி.நந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் நுண்கடன் திட்டத்தின் அடிப்படையில் விளிம்பு நிலை மக்களுக்கு கூடிய வட்டியில் கடன் வழங்குகின்றன.

இந்த வட்டியைச் செலுத்த முடியாத ஏழை விவசாயிகள், மீனவர்கள் போன்றோர் தங்களது தொழில் நடைபெறாத காலங்களில் மேற்படி நிதி நிறுவனங்களை நாடி கடன் பெற்று வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர்.

இந்த கடன்களுக்கான வட்டியை மீளசெலுத்த முடியாத நிலையில் குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டு விரக்தியில் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் நாளொன்றுக்கு மூவர் அல்லது நால்வர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக திருகோணமலை பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அபாயகரமான சமூக குறிகாட்டியாகும். நுண்கடனை வழங்கும் நிதி நிறுவனங்கள் கடனை வழங்குவது உயர் வசதி படைத்தவர்களுக்கோ அல்லது சட்டத்தரணிகளுக்கோ, வைத்தியர்களுக்கோ அல்ல. சாதாரண கூலித் தொழிலாளர்களுக்கே அவர்கள் கடன் வழங்குகிறார்கள்.

இத்தொழிலாளர்கள், கடனையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று சி.நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .