2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘அரசாங்கத்தால் திருகோணமலை புறக்கணிப்பு’

Editorial   / 2018 மே 03 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்

தற்போதைய அரசாங்கத்தால், திருகோணமலை மாவட்டம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது எனக் குற்றஞ்சாட்டிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், அது வருத்தமளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில், எமது திருகோணமலை மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். எனினும், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இம்மாவட்டத்தின் அபிவிருத்தியில் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எதுவும் நிகழவில்லை.

“வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், மீன்பிடி என்று சகல துறைகளிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆனாலும், இந்தக் குறைபாடுகளில் ஒரு பகுதியேனும் இன்னும் தீர்க்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்துக்குள், மாவட்டத்தில் இருக்கும் பிரச்சினைகளில் சிறு பகுதியான பிரச்சினைகளையே தீர்க்க முடிந்தது எனத் தெரிவித்த அவர், அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை எனவும், இதன் காரணமாக, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாதவர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

“தேர்தல் காலங்களில் நல்லாட்சிக்கு எதிராகச் செயற்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளரே, திருகோணமலையில் பிரதி அமைச்சராகக் காணப்பட்டார். இந்த மாவட்டத்தில் அதிகாரங்கள் அனைத்தும் அவரிடம் காணப்பட்டதால், நல்லாட்சிக்குப் பாடுபட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண எம்மால் முடியவில்லை.

“இவர், அண்மையில் எதிரணிக்குச் சென்றதால், அமைச்சரவை மாற்றத்தின்போது திருகோணமலையில் ஆளும் கட்சியில் உள்ள மூன்று உறுப்பினர்களில் ஒருவருக்காவது பிரதி அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியது" என்று குறிப்பிட்டார்.

இவ்வரசாங்கம், திருகோணமலையை முற்றுமுழுதாகக் கைவிட்டுவிட்டது எனக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண, மாற்று வழி ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் எனவும், மக்களின் தீர்வுகாணாமல், பதவிகளை வகிப்பதில் பயனில்லை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X