2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’இன நல்லிணக்கத்தை சீர்குலைக்காதீர்’

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள், மிகுந்த மன வேதனையை அளிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் இரு தரப்புகள் மீதான தனது திருப்தியின்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த பாடசாலையில், அபாயா அணிந்து செல்வதற்கு, ஆசிரியைகள் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, பாடசாலைக்குள் புகுந்து, அவ்வாசிரியைகளின் கணவர்கள், குழப்பம் விளைவித்தனர் எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இம்ரான் மஹ்ரூப் எம்.பி, "பாடசாலைக்குள், பாடசாலை அதிபரின் அனுமதி இன்றி நுழைந்து, பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளுக்கு யார் குழப்பம் விளைவித்தாலும், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை" என்று தெரிவித்ததோடு, அவ்வாறான சம்பவத்துக்கு எதிராக, பெற்றோரால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்துவதையும் நியாயப்படுத்தினார்.
ஆனால், பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், இனவாதத்தைத் தூண்டும் வகையில் காணப்பட்டது எனக் குறிப்பிட்ட மஹ்ரூப் எம்.பி, அது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
“அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்கள் அணியும் ஆடை விடயத்தில் ஏதாவது பிரச்சினை காணப்படின், அதை கல்வித் திணைக்கள அதிகாரிகளுடன் பேசி, சுமூகத் தீர்வொன்றைக் கண்டிருக்கலாம். ஆனால், இந்தப் பிரச்சினையை, இந்த அளவு பூதாகரமாக்கிய பாடசாலை நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஆகியோரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று, எம்.பியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை, எதிர்வரும் நாட்களில் அனைத்துத் தரப்போடும் கலந்துரையாடிப் பெறமுடியும் என்று, தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், அதுவரை, இனவாதத்தைத் தூண்டும் பிரசாரங்களில் இருந்து விலகி, இன ஒற்றுமையைச் சீர்குலைக்கா வண்ணம் செயற்படுமாறு, அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X