2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கர்ப்பிணிகளுக்கான உணவுப் பொருட்களில் ​மோசடி

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - மூதூர் பிரதேசத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற பொதிகளில் மோசடி செய்த கடை உரிமையாளருக்கு எதிராக, இன்று (24) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென, திருகோணமலை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு முத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அம்முத்திரைகளுக்குப் பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, கடையொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதிக்குக் குறைவாக அக்கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என, பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் முறைப்பாடு செய்தனர்.
இம்முறைப்பாட்டையடுத்து, நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குப் பதிலாக 1,544 ரூபாய் பெறுமதியான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுவருவது தெரியவந்துள்ளதென, நுகர்வோர் அதிகாரசபையினர் தெரிவித்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக, இம்மோசடி இடம்பெற்று வந்துள்ளதெனவும், மூதூர் பிரதேசத்தில் 1,250 கர்ப்பிணித் தாய்மாருக்கு உணவுப் பொதிகளுக்குரிய முத்திரை வழங்கப்பட்டுள்ளதெனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த விநியோகம் செய்த கடைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை இடைநிறுத்தி, அக்கடை உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென, மாவட்ட இணைப்பதிகாரி தனசேகரன் வசந்தசேகரன் தெரிவித்தார்.
அத்துடன், இனிவரும் காலங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், தங்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு முத்திரைகளின் பின் பக்கத்தில் வழங்கப்பட வேண்டிய பொருட்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதெனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் தமக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் முத்திரை தொடர்பாக கூடிய அவதானத்துடன் செயற்படுமாறும், தனசேகரன் வசந்தசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X