2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையத்துக்காகச் சுவீகரிக்கப்பட்ட காணியில் அத்துமீறி வசித்துவருவதாக, மூவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என் றிஸ்வான், எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் 19ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளார்.

இந்த வழக்கை, மூதூர் பிரதேச செயலகம் தொடர்ந்த நிலையில், இவ்வழக்கு, நேற்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இங்கு பொதுமக்கள் தரப்பில் ஆஜரான மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின்  சட்டத்தரணி எஸ்.இரத்தினவேல், குறித்த காணியில் அனல் மின்நிலையம் அமைக்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, குறித்த மூவருடைய காணிகளையும் விடுவிக்க வேண்டும் என கூறினார்.

இதற்கு கருத்து வெளியிட்ட அரச தரப்பு சட்டத்தரணி, குறித்த அறிவித்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்தே, எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் 19ஆம் திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் தெரிவித்தார்.

அனல் மின்நிலைத்துக்கான நீர் குழாய் கட்டமைப்பு மற்றும் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி இறக்கும்  பணிக்காக, கடற்கரைச்சேனைக் கிராமத்திலும், சம்பூரிலும்  காணிகள் மக்களிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டன.

குறித்த மூவரும் அதற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வெளியேற மறுத்த நிலையில், பிரதேச செயலாளர் வழக்குத் தொடர்ந்தார். பொதுமக்களுடன் மேலும் பலரின் காணிகளும் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மூவருக்கெதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டடுள்ளது.

மக்கள் இடம்பெயர்ந்து, தாம் பூர்வீகமாக வாழ்ந்த காணியில்  மீளக்குடியமர்ந்த  சூழலிலேயே இந்த சுவீகரிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X