Editorial / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
கொரியர் (Courier) சேவை ஊடாக கரடி பொம்மைக்குள் மறைத்து 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 8) மாலை, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினரே இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறும், ஏப்ரல் 13-ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, நேற்று (ஏப்ரல் 13) சந்தேக நபர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், வழக்கினை ஏப்ரல் 20-ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (D.C.D.B) பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்நாயக்கவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கைதான 43 வயதுடைய சந்தேக நபர், காரைதீவு பிரதேச சபையில் 'தோடம்பழம்' சுயேட்சைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகப் பணியாற்றியவர் ஆவார். கொரியர் மூலம் வந்த விளையாட்டுப் பொருட்களில் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைக்கப்பட்டிருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் இவரிடமிருந்து மீட்கப்பட்டது.
அத்துடன், போதைப்பொருள் அளக்கப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு, 2 கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பனவும் சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்பார்வை: கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரையின் கீழ், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலில் இந்தச் சோதனை நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
14 minute ago
24 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
2 hours ago
2 hours ago