2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினம்....

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தியாக தீபம் அன்னை பூபதியின் உன்னதமான தியாகத்தை நினைவு கூரும் முகமாகவும், அந்த வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் வகையிலும் வடக்கு-கிழக்கு தழுவிய ரீதியில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (19.04.2026) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

வாகனப் பேரணி: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அன்னை பூபதியின் திருவுருவப் படம் ஏந்திய வாகனப் பேரணி, 11ஆம் நாளான இன்று அன்னை தனது உண்ணா நோன்பை ஆரம்பித்த மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தைச் சென்றடைந்தது. அங்கு அன்னை உண்ணா நோன்பு இருந்த இடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பேரணி நாவலடியில் உள்ள அன்னையின் நினைவிடத்தை வந்தடைந்தது.

நினைவேந்தல் நிகழ்வு: நினைவேந்தலின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் நடைபெற்றது. இதன்போது அன்னை பூபதிக்கான திதிக் கடமைகள் குடும்ப உறவுகளால் நிறைவேற்றப்பட்டன.

  • ஈகைச் சுடர்: அன்னையின் இளைய மகள் ராதா அவர்களினால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.

  • மலரஞ்சலி: அன்னையின் மூத்த மகள் சாந்தி அவர்களினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கலந்துகொண்டோர்: இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், இ. சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை. தினேஸ், மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ், தாயகச் செயலணியின் மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் இருதயம் செல்வகுமார் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகள்: அன்னையின் தியாகத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் வாகரை பிரதேசங்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கல்விசார் போட்டிகள் நடத்தப்பட்டன.

  • கிரான் பிரதேசம் (ஏப்ரல் 06): பெண்களுக்கான மரதன், கயிறிழுத்தல், எல்லை விளையாட்டு மற்றும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

  • வாகரை பிரதேசம் (ஏப்ரல் 15, 18): உதைபந்தாட்டம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் இன்றைய நினைவேந்தல் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன. தேச விடுதலைக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக, மக்கள் மிகுந்த உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பூ.லின்ரன், வாலகிருஸ்ணா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .