2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை - நியூசிலாந்து 2ஆவது டெஸ்ட்: 3ஆவது நாள்

A.P.Mathan   / 2015 ஜனவரி 05 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநிறைவின்போது நியூசிலாந்து அணி 118 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 221 ஓட்டங்களையும், இலங்கை அணி 356 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன. 

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 75 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் முதலாவது விக்கெட்டை இழந்தது.

40 ஓட்டங்களைப் பெற்றிருந்த ருதபோர்ட், நுவன் பிரதீப்பின் பந்துவீச்சில் சந்திமாலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 35 ஓட்டங்களைப் பெற்றிருந்த லதாமின் விக்கெட்டையும் நுவன் பிரதீப் வீழ்த்தியபோது நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 78 ஆக இருந்தது. அடுத்துவந்த ரோஸ் டெய்லரை ஓட்டமெதுவும் பெறாத நிலையில் றங்கன ஹேரத் போல்ட் செய்ய, 79 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 3 விக்கெட்களை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது. 

கேன் வில்லியம்சனும் அணித்தலைவர் மக்கலமும் இணைந்து நிதானமாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 122 வரை உயர்த்தினர். 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளையில் பிரண்டன் மக்கலம், தம்மிக பிரசாத்தின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யுவாகி வெளியேறினார். 

அடுத்துவந்த ஜேம்ஸ் நீசாம், களத்தில் ஒரு மணிநேரம் நிலைத்து நின்றாலும் 19 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் நுவன் பிரதீப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து அணி 159 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

அதன் பின்னர் விக்கெட் காப்பாளர் வட்லிங்கும் வில்லியம்சனும் பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தைப் புரிந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 253 வரை உயர்த்தியிருந்த நிலையில் இன்றை நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. 

வில்லியம்சன் 200 பந்துவீச்சுக்களைச் சந்தித்து 80 ஓட்டங்களையும், வட்லிங் 140 பந்துகளில் 48 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .