
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோருக்கிடையிலான மோதல் பற்றி டோனி தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ரவீந்தர் ஜடேஜா தண்டிக்கப்பட்டது மன உடைவை தந்துள்ளதாகவும், அதை ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் டோனி தெரிவித்துள்ளார். ரவீந்தர் ஜடேஜா ஆக்ரோஷமாக முறைத்துப் பார்த்தார் என்ற குற்றத்திற்காக போட்டி ஊதியத்தில் இருந்து 50 சதவீதத்தினை தண்டமாக போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூண் அறவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த நிலையிலேயே டோனி தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு நடந்த விடயத்தையும் கூறியுள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் மதிய போசன இடைவேளைக்கு வெளியே செல்லும் போது ஜடேஜாவை நோக்கி வீரர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்தார். அதை கவனித்த நான் நடுவே சென்று அது தொடராத மாதிரி பார்த்துக் கொண்டேன். மைதானத்தை விட்டு வெளியே சென்று வீரர்கள் அறைக்கு அண்மையில் செல்லும் வேளையில் ஜடேஜா எனக்கு பின்னால் ஒன்று அல்லது இரண்டு யார் தூரத்தில் வந்து கொண்டு இருந்தார். குறித்த வீரர் மீண்டும் ஜடேஜாவை நோக்கி ஏதோ கூற அவர் குறித்த வீரரை திரும்பி பார்த்தார். அப்போது அந்த வீரர் ஜடேஜாவை தள்ளி விட அவர் சமநிலையை இழந்து தடுமாறிப் போனார். யார் என்ன சொன்னார்கள் என திர்ம்பிப் பார்ப்பது குற்றமா? இவ்வாறு டோனி நடந்த சமபவம் பற்றி விளக்கியுள்ளார். போட்டி நிறுத்தப்பட்டு வெளியே வந்து குறித்த சம்பவம் நடக்கும் வரை ஜடேஜா ஒரு வார்த்தை தானும் பேசவில்லை. நான் பொய் சொல்லவில்லை என்றால் நீங்களே இந்த சம்பவம் தொடர்பாக முடிவு செய்து கொள்ளுங்கள் எனவும் டோனி கூறியுள்ளார். அவர் யார் அந்த சம்பவத்தில் ஈடுபட்டது என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.
தரம் 2 இற்கான குற்றத்திற்கு தரம் 1 இற்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளதும் இதுவே முதற்தடவை எனக் கூறியுள்ள டோனி, இங்கே தரம் 1 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியாது. ஆனால் தரம் 2 இற்கான குற்றத்திற்கு மீள் முறையீடு செய்ய முடியும். இந்த தண்டனையின் சிறப்பே அதுதான் எனவும் விமர்சித்துள்ளார். அத்துடன் முதற்தடவையாக விசாரணையில் ஒரு பக்க நியாயம் மாத்திரம் கேட்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த தண்டனைக்கு மீள் முறையீடு செய்ய முடியாத போதும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை குறித்த சமபவம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவருகின்றது. ஜெம்ஸ் அன்டர்சன் மீதான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. அவருக்கு குறைந்தது இரண்டு போட்டிகளுக்கான தடை வழங்கப்படும் என எதிர்பார்கப்படுகின்றது.