2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

முதலாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டி

A.P.Mathan   / 2015 ஜூன் 30 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது பகல் - இரவு டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலிய நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இறுதிப்போட்டியை இவ்வாறு பகல் - இரவுப் போட்டியாக நடாத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளன. 

இதன்படி, நவம்பர் 27 முதல் டிசெம்பர் முதலாம் திகதிவரை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியாக விளையாடப்படவுள்ளது. 

இந்தப் போட்டியின்போது கூக்காபுரா நிறுவனத் தயாரிப்பான இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் விடுமுறைகளல்லாத நாட்களிலேயே நடாத்தப்படுகின்றன. இது, ஏற்கனவே பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மேலும் பார்வையாளர்களற்ற நிலையை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த பகல் - இரவு நேரமாற்றமானது வேலை முடிந்து வருபவர்களும், மாணவர்களும் ஒரு பொழுது ஆட்டத்தையேனும் நேரில் மைதானத்துக்குச் சென்றோ, அல்லது தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கான வாய்ப்பினையோ ஏற்படுத்திக்கொடுக்கும்' என்று உற்சாகம் காட்டுகிறார் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் பிரதான நிர்வாகியான ஜேம்ஸ் சதர்லான்ட். 

இந்த பகல் - இரவு டெஸ்ட் போட்டித் திட்டத்துக்கு ஆரம்பம் முதலே பலத்த ஆதரவைத் தெரிவித்தவர்களில் இவர் முக்கியமானவர்.

அதேவேளை அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டரன் லீமன் கருத்துத் தெரிவிக்கும்போது 'பாரம்பரியமான டெஸ்ட் போட்டிகள் பகல் - இரவுப் போட்டிகளாக விளையாடப்படும்போது எவ்வித விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதைக் காண்பதற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விளக்கு வெளிச்சத்தில் ஆடுகளங்களின் தன்மைகளை அறியாமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது வீரர்களுக்கு மிகுந்த சவாலானது' எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .