2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆஸிக்கு இனிங்ஸ் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் 5ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இலகுவான இனிங்ஸ் வெற்றியொன்றைப் பெற்றுள்ளது.

6 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களுடன், இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 129 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் 4ஆவது நாளில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 286 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரண்டு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்த போதிலும், அதன் பின்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக, போட்டியின் மதிய போசன இடைவேளைக்கு முன்னதாக போட்டி இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், போட்டி மீள ஆரம்பிக்கப்பட்ட போது ஏனைய இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அலஸ்டெயர் குக் 85 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 42 ஓட்டங்களையும் மொயின் அலி 35 ஓட்டங்களையும் ஜொனி பெயர்ஸ்டோ 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, பீற்றர் சிடில் 4 விக்கெட்டுகளையும் நேதன் லையன், மிற்சல் மார்ஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், மிற்சல் ஜோன்சன், ஸ்டீவன் ஸ்மித் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த அவுஸ்திரேலிய அணி 481 ஓட்டங்களைப் பெற, இங்கிலாந்து அணி 149 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலியா சார்பாக சதம் பெற்ற ஸ்டீவன் ஸ்மித் தெரிவானார்.
இத்தொடரின் இங்கிலாந்து சார்பான நாயகனாக ஜோ றூட்டும், அவுஸ்திரேலியா சார்பாக நாயகனாக கிறிஸ் றொஜர்ஸ§ம் தெரிவாகினர்.

இப்போட்டியே அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோரின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .