2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அரையிறுதியில் அவுஸ்திரேலியா ஆர்ஜென்டினாவைச் சந்திக்கிறது

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்கு, அவுஸ்திரேலிய அணி தகுதிபெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணியைத் தோற்கடித்தே அவ்வணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றதோடு, மற்றைய காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற ஆர்ஜென்டின அணியோடு அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலிய, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி, மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதோடு, இறுதி நிமிடம் வரை இரு அணிகளுக்கும் வாய்ப்பாகக் காணப்பட்ட போட்டியாக அமைந்தது.

முதற்பாதி முடிவில் 16-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்கொட்லாந்து அணி முன்னிலை வகித்ததோடு, இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மாறி மாறி முன்னிலையைப் பெற்று வந்தன. ஒரு கட்டத்தில், 30-24 என்ற புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை வகித்த போதிலும், அதன் பின்னர் போராடிய ஸ்கொட்லாந்து, 34-32 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால், இறுதி நேரத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு, சர்ச்சைக்குரிய முறையில் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட, அதன் மூலம் பெறப்பட்ட 3 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணி 35-34 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

மார்க் பென்னெட்டினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, 'ஓப் சைட்" என போட்டி மத்தியஸ்தர் கிறெய்க் ஜோபேர்ட் தீர்மானித்து, அதற்காக பெனால்டியை வழங்கினார். எனினும், மறு ஒளிரப்புகளின்படி, அப்பந்தானது அவுஸ்திரேலிய வீரரில் பட்டிருந்தது தெளிவாகத் தெரிய, வழங்கப்பட்ட 'ஓப் சைட்", தவறானது எனப் புலப்பட்டது.

முன்னதாக, ஆர்ஜென்டின, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆர்ஜென்டின அணி 43-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த ஆர்ஜென்டினா, முதற்பாதி முடிவில் 20-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்ததோடு, இரண்டாம் பாதியிலும் சிறப்பாகச் செயற்பட்டு, வெற்றிபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .