2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

அஸார், யுனிஸ் சிறப்பாட்டம்

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 04 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், சிறந்த போராட்டத்தை, பாகிஸ்தானின் அஸார் அலி, யுனிஸ் கான் இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.

3 விக்கெட்டுகளை இழந்து 365 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 538 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. இதில், இரட்டைச்சதம் பெறும் வாய்ப்பைக் கொண்டிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மற் றென்ஷோ, இரட்டைச்சதத்துக்கு 16 ஓட்டங்கள் இருக்கும் போது, 184 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால், தனது 4ஆவது டெஸ்டில் விளையாடும் பீற்றர் ஹான்ட்ஸ்கொம்ப், தனது 2ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர், 110 ஓட்டங்களைப் பெற்றார். தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய ஹில்டன் கார்ட்ரைட், 37 ஓட்டங்களைப் பெற்றார். விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட், 29 ஓட்டங்களைப் பெற்றார். முன்னதாக முதல் நாளில், உப தலைவர் டேவிட் வோணர், 95 பந்துகளில் 113 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

தொடர் முழுவதும் தடுமாறியிருந்த பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டனர். போட்டியின் 4ஆவது ஓவரின் முதலாவது பந்தில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷர்ஜீல் கான் ஆட்டமிழக்க, அதே ஓவரின் 5ஆவது பந்தில், பாபர் அஸாம் ஆட்டமிழந்தார். இதன்மூலம், 2 விக்கெட்டுகளை இழந்து 6 ஓட்டங்கள் என்ற நிலைமையில், பாகிஸ்தான் அணி தடுமாறியது.

ஆனால், 3ஆவது விக்கெட்டுக்காக இணை சேர்ந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஸார் அலி, அனுபவ வீரர் யுனிஸ் கான் இருவரும், பிரிக்கப்படாத 120 ஓட்டங்களைப் பகிர்ந்து, சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்படி, 2 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களுடன், பாகிஸ்தான் அணி காணப்படுகிறது. யுனிஸ் கான், அஸார் அலி இருவரும் முறையே, ஆட்டமிழக்காமல் 64, 58 ஓட்டங்களைப் பெற்று, களத்தில் காணப்படுகின்றனர்.
வீழ்த்தப்பட்ட இரண்டு விக்கெட்டுகளையும், ஜொஷ் ஹேஸல்வூட் வீழ்த்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .