Shanmugan Murugavel / 2016 மே 23 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான குசால் ஜனித் பெரேரா, இங்கிலாந்துக்கெதிரான இலங்கைத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். விசா சம்பந்தமான பணிகள் நிறைவடைந்தவுடன், உடனடியாகவே அவர் இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இத்தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத், தோட்பட்டை உபாதை காரணமாக இலங்கைக்குத் திரும்பியுள்ள நிலையிலேயே, அவருக்குப் பதிலாக குசால் பெரேரா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயமாக, காயம் காரணமாக தம்மிக்க பிரசாத் இலங்கைக்குத் திரும்பியுள்ள போதிலும், இந்தத் தொடரிலிருந்து அவர் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளார் என, இலங்கை கிரிக்கெட் சபையால் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்தார் எனத் தெரிவித்து, கடந்தாண்டு டிசெம்பரில் இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்ட குசால் பெரேரா, இம்மாத இரண்டாம் வாரத்தில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறு எனத் தெரிவித்து, போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பின்னர், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஆனால், தற்போது டெஸ்ட் தொடருக்கே அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாகத் துடுப்பாட்ட வீரரொருவரைச் சேர்க்கும் முடிவு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய, இலங்கைக் குழாமில் போதுமான பந்துவீச்சாளர்கள் காணப்படுவதாகவும், எனவே தான் குசால் பெரேராவைச் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, ஓர் இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் தோல்வியடைந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், குசால் பெரேராவைச் சேர்ப்பதற்கான ஆர்வம் காணப்படுமென்ற போதிலும், அப்போட்டியில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புக் குறைவானது என்றே கருதப்படுகிறது. மாறாக, மூன்றாவது போட்டியில் அவர் சேர்க்கப்படுவார் என்றெ எதிர்பார்க்கப்படுகிறது.
தன் மீதான இடைக்காலத் தடை நீக்கப்பட்டு, ஊக்கமருந்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே 13ஆம் திகதி முதல், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தேசிய அக்கடமியில், குசால் பெரேரா பயிற்சிகளை மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago