2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

இறுதிப் போட்டியில் றியல் மட்ரிட்

Gopikrishna Kanagalingam   / 2017 மே 11 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது. அத்லெட்டிகோ மட்ரிட் அணியைச் சமாளித்தே, இந்த வாய்ப்பை, றியல் மட்ரிட் அணி பெற்றுக் கொண்டது.

இரு அணிகளுக்குமிடையில், றியல் மட்ரிட்டின் சொந்த மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்று அரையிறுதியில், 3-0 என்ற கோல் கணக்கில், றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றிருந்தது. எனவே, குறிப்பிடத்தக்க அனுகூலத்துடனேயே, றியல் மட்ரிட் அணி களமிறங்கியது.

ஆனால், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அத்லெட்டிகோ மட்ரிட் அணி, 12ஆவது நிமிடத்தில், சவுள் நீகே மூலம் கிடைக்கப்பெற்ற கோலுடன், முன்னிலை பெற்றது.

அதன் பின்னர், 16ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அத்லெட்டிகோ மட்ரிட்டின் அற்வன்ட் கிறீஸ்மான், கோலாக்கினார். இதையடுத்து, போட்டியின் 16ஆவது நிமிடத்திலேயே 2-0 என்ற கோல் முன்னிலையை அவ்வணி பெற்றதோடு, றியல் மட்ரிட் அணியை வென்று, இறுதிப் போட்டிக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது.

ஆனால், றியல் மட்ரிட் அணி, ஒரு கோலைப் பெற்றாலேயே, அத்லெட்டிகோ மட்ரிட்டின் வாய்ப்புகள், வெகுவாகக் குறைவடையும் என்பதை உணர்ந்து, றியல் மட்ரிட் வீரர்களும், விட்டுக்கொடுக்காது விளையாடினர். இந்நிலையில், 42ஆவது நிமிடத்தில், டொனி குரூஸ் அடித்த அற்புதமான அடி தடுக்கப்பட்ட நிலையில், அந்தப் பந்தைப் பெற்றுக் கொண்ட இஸ்கோ, அதைச் சிறப்பான முறையில் கோலாக்கினார். இதைத் தொடர்ந்து, 2-1 என, அத்லெட்டிகோ மட்ரிட்டின் பக்கமாக, முதலாவது பாதி முடிவடைந்தது. இரண்டாவது பாதியில், இரு அணிகளாலும் கோல்கள் எவையும் பெறப்படாத நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில், அத்லெட்டிகோ மட்ரிட் அணி வெற்றிபெற்றது. ஆனால், அரையிறுதிப் போட்டிகளின் ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில், 4-2 என்ற அடிப்படையில் வெற்றிபெற்ற றியல் மட்ரிட் அணி, தனது சம்பியன் பட்டத்தைத் தக்க வைப்பதற்காக, இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டது.

கடந்த 4 ஆண்டுகளில், சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு, றியல் மட்ரிட் அணி தெரிவாகியுள்ள 3ஆவது தடவை இதுவாகும். அதேபோல், அத்லெட்டிகோ மட்ரிட் அணியை, சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, றியல் மட்ரிட் அணி வெளியேற்றும் தொடர்ச்சியான 4ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். இதில், 2014ஆம், 2016ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதிப் போட்டிகளும் உள்ளடங்குகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .