2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலக்கு 386: தடுமாறுகிறது இலங்கை

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் முடிவில், இந்திய அணி முன்னிலையில் காணப்படுகிறது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 21 ஓட்டங்களுடன் இந்திய அணி நேற்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

நான்காவது விக்கெட்டுக்காக 41 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகள் இழக்கப்பட்டு, 7 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களுடன் தடுமாறியது. இறுதியில் இரவிச்சந்திரன் அஷ்வின் சிறப்பாக ஆடி, இந்திய அணி 274 ஓட்டங்களைப் பெறுவதை உறுதிசெய்தார்.

துடுப்பாட்டத்தில் அஷ்வின் 58, றோகித் ஷர்மா 50, ஸ்டுவேர்ட் பின்னி 49, அமித் மிஷ்ரா 39, நமன் ஓஜா 35 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் ரங்கன ஹேரத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்படி, 386 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, முதலாவது ஓவரிலேயே முதலாவது விக்கெட்டை இழந்ததோடு, 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதோடு, 3ஆவது விக்கெட்டை 21 ஓட்டங்களுக்கு இழந்தது. எனினும், இறுதியில் 4ஆம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

கௌஷால் சில்வா, அஞ்சலோ மத்தியூஸ் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 24, 22 ஓட்டங்களைப் பெற, பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதன்படி, இப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு இந்தியாவுக்கு 7 விக்கெட்டுகள் தேவைப்பட, இலங்கைக்கு 319 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .