Shanmugan Murugavel / 2016 ஜூன் 27 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னமெரிக்க நாடுகளுக்கிடையே இடம்பெறுகின்ற கோப்பா அமெரிக்கா தொடரின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற தொடரில், கடந்த வருட சம்பியன்களான சிலி, கடந்த வருடத்தை போன்றே, கடந்த வருடம் இரண்டாமிடம் பெற்ற ஆர்ஜென்டீனாவை பெனால்டியில் தோற்கடித்து, தமது பட்டத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், மேலதிக நேரத்துக்கு போட்டி சென்றிருந்தது. அதிலும் இரண்டு அணிகளும் கோல்களைப் பெறாத நிலையில், போட்டியில் முடிவு பெனால்டிக்கு சென்ற நிலையில், 4-2 என்ற ரீதியில் பெனால்டியில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்த சிலி, மீண்டும் சம்பியனாகிக் கொண்டது.
பெனால்டியை முதலில் சிலி சார்பாக ஆரம்பித்த அர்டுரோ விடாலின் பெனால்டியை ஆர்ஜென்டீனாவின் கோல்காப்பாளர் சேர்ஜியோ ரொமாரோ தடுக்க, ஆர்ஜென்டீனா முன்னிலை பெறும் என்ற நிலை காணப்பட்டது. எனினும், ஆர்ஜென்டீனா சார்பில் முதலாவது பெனால்டியை அடித்த, உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரராக வர்ணிக்கப்படும் மெஸ்ஸி, கோல்கம்பத்துக்கு மேலாக தனது பெனால்டியை அடிக்க, கோல் எண்ணிக்கை ஒன்றுமில்லாமல் சமநிலையில் காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சிலி சார்பாக பெனால்டியை அடித்த, நிக்கொலஸ் கஸ்டிலோ, சார்லஸ் அரங்கீஸ், ஜோன் புஷிஷூர் ஆகியோர் தமது பெனால்டிகளை கோலாக்கவும் ஆர்ஜென்டீனா சார்பாக ஜேவியர் மஷரானோ, சேர்ஜியோ அக்ரோ தமது பெனால்டிகளை கோலாக்கவும் 3-2 என்ற நிலையில் காணப்பட்டபோது ஆர்ஜென்டீனாவின் லூகாஸ் பிஜிலியா அடித்த பெனால்டியை சரியாகக் கணித்த சிலியின் கோல்காப்பாளர் கிளாடியோர பிராவோ தடுக்க, சிலி சார்பாக இறுதிப் பெனால்டியை அடித்த பிரான்சிஸ்கோ சில்வா தனது பெனால்டியை கோலாக்கினால் சிலி சம்பியனாகும் என்ற நிலை காணப்பட்ட நிலையில், அவர் தனது பெனால்டியை கோலாக்க சிலி சம்பியனாகியது.
அமெரிக்காவுடனான ஆர்ஜென்டீனாவின் அரையிறுதிப் போட்டியில் காயமடைந்த எஸிக்கில் லவேஸிக்குப் பதிலாக, உடற்றகுதி தொடர்பாக சந்தேகத்தை கொண்ட ஏஞ்சேல் டி மரியா ஆர்ஜென்டீனா அணியில் இடம்பெற்றதுடன், சிலி சார்பாக, ஒரு போட்டித் தடையின் பின்னர், அர்டுரோ விடால் அணிக்கு திரும்பியிருந்தார்.
போட்டியின் முதலாவது நிமிடத்திலேயே, ஆர்ஜென்டீனாவுக்கு எவர் பனிகா மூலம் கோல் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தும் அப்பந்து அச்சந்தர்ப்பத்தில் கோல்கம்பத்துக்கு வெளியே சென்றது. அதன் பின்னர், சிலியின் கரி மெடேல் சறுக்க, சிலி கோல்காப்பாளர் கிளாடியோ பிராவோக்கு மேலால் கொன்ஸலோ ஹியூகைன் பந்தை தூக்கிப் போட்டபோதும் பந்து கோல்கம்பத்துக்கு வெளியால் சென்றது.
அதன் பின்னர் போட்டியின் 28ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியை தடுத்தமைக்காக சிலியின் மார்ஷெலோ டயஸுக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பெற்று, சிவப்பு அட்டை பெற்று மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் 10 பேருடனேயே சிலி விளையாடவேண்டி ஏற்பட்டது, அதனால் ஆர்ஜென்டீனாவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. எனினும் போட்டியின் 43ஆவது நிமிடத்தில் விடாலின் பின்னாலிருந்து பந்தைப் பறிக்க முயன்ற மார்க்கோஸ் ரோஜோவுக்கு நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பெற்று அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், இரண்டு அணிகளும் தலா 10 வீரர்களுடனேயே மிகுதி நேரம் விளையாடியிருந்தன.
இரண்டாவது பாதியில் ஹியூகைனுக்கு பதிலாக அக்ரோ அறிமுகப்படுத்தப்பட்டு, போட்டியின் 85ஆவது நிமிடத்தில் அக்ரோவுக்கு மெஸ்ஸி பந்தை வழங்கியிருந்தபோதும், அவரின் உதை, கோல்கம்பத்துக்கு மேலால் சென்றிருந்ததோடு, பின்னர், மேலதிக நேரமான 101ஆவது நிமிடத்திலும் அக்ரோ தலையால் முட்டிய பந்தை பிராவோ அபாரமாக தடுத்த நிலையிலேயே, போட்டியின் முடிவு பெனால்டிக்குச் சென்றிருந்தது.
28 minute ago
40 minute ago
44 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
44 minute ago
49 minute ago