2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிம்பாப்வேயை வென்றது ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்றுவரும் ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் புலவாயோவில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 58 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைக் குவித்தது. இதில், மூன்றாவது இடத்தில் இறங்கிய மொஹமட் நபி 116 ஓட்டங்களைப் பெற்றார். இது, ஒருநாள் சர்வதேசப்போட்டிகளில் அவரது முதலாவது சதமாகும். தவிர நூர் அலி சட்ரான் 60 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக தினேஷே பணயங்கார, தினோடென்டா முட்டொம்பொட்சி தலா 2 விக்கெட்களையும், வெலிங்டன் மசகட்ஸா, டெண்டாய் சிஸோரோ தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக லுக் ஜோங்வி 46 ஓட்டங்களையும், கிரேய்க் எர்வின் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக தவால்ட் ஸட்ரான், அஃப்தாப் அலாம், சமியுல்லா ஷென்வாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டினையும் ரஷீத் கான், அமீர் ஹம்சா, மொஹமட் நபி தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக மொஹமட் நபி தெரிவானார். முதற்போட்டியை சிம்பாப்வே அணி வென்றிருந்த நிலையில் தற்போது தொடர் சமநிலையாகியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .