Shanmugan Murugavel / 2016 நவம்பர் 07 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முதல்நிலை வீரராக, கடந்த சனிக்கிழமை மாலை முடிசூடிக்கொண்ட பெரிய பிரித்தானியாவின் அன்டி மரே, அந்த அடைவை, மறுநாள் இரவு இடம்பெற்ற பரிஸ் மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தோடு கொண்டாடினார்.
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவரும், இத்தொடரில் 27ஆம் நிலை வீரராகக் காணப்பட்டவருமான ஜோன் இஸ்னரை இறுதிப் போட்டியில் எதிர்கொண்ட அன்டி மரே, கடுமையாகப் போராடியே வெற்றிபெற்றார்.
முதலாவது செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய அன்டி மரே, இரண்டாவது செட்டில், இஸ்னரிடமிருந்து கடுமையான சவாலை எதிர்கொண்டார். இறுதியில், அந்த செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றிய இஸ்னர், மூன்றாவது செட்டுக்கு, தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார்.
மூன்றாவது செட்டிலும் இருவரும் கடுமையாகப் போராடிய போதிலும், இறுதியில் 6-4 என்ற புள்ளிகள் கணக்கில், அன்டி மரே வெற்றிபெற்றார். இதனால், அப்போட்டியில் சம்பியன் பட்டத்தையும் அவர் வென்றார்.
இந்த சம்பியன் பட்டம், அன்டி மரேயின் வாழ்வில் அவர் பெற்ற 14ஆவது மாஸ்டர்ஸ் தொடர் சம்பியன் பட்டமாகும். அத்தோடு, அவரது 43ஆவது சம்பியன் பட்டமாகும்.
ஏற்கெனவே கைப்பற்றிய முதலிடத்தைத் தொடர்ந்து, ஏ.டி.பி உலகத் தொடர் இறுதிப் போட்டிகளில், முதல்நிலை வீரராகக் களமிறங்கவுள்ள அன்டி மரே, எதையுமே இலகுவாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார். அத்தோடு, தரப்படுத்தலில் முதலிடம், நிரந்தரமானது அன்று எனவும் அவர் குறிப்பிட்டார்.
"இது (தரப்படுத்தலில் முதலிடம்), சிலவேளை ஒரு வாரத்துக்கு மட்டுமே உரியதாக இருக்கலாம். அதை நான், உலகத் தொடர் இறுதிப் போட்டிகளில் இழந்து, திரும்பவும் பெற முடியாது போகலாம், ஆகவே அதை மகிழ்ச்சியாக உணர்வதற்கு நான் முயல்வேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
முதலிடத்தை இழந்த ஜோக்கோவிச்சுக்கும் அன்டி மரேக்கும் இடையிலான வித்தியாசம், 405 புள்ளிகளாக மாறியுள்ளது. ஆனால், உலகத் தொடர் இறுதிப் போட்டிகளில் தோல்வியடையாது, அந்தப் பட்டத்தை ஜோக்கோவிச் கைப்பற்றினால், முதலிடத்தை அவரால் பெற்றுக் கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago