2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

சம்பியன்ஸ் லீக்: பெயார்ணை தோற்கடித்தது அத்லெட்டிகோ

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 29 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின், கடந்த புதன்கிழமை (28) இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளில், அத்லெட்டிகோ மட்ரிட், பார்சிலோனா, ஆர்சனல், பரிஸா ஜேர்மா, நாபோலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றதுடன், மன்செஸ்டர் சிற்றி, செல்டிக் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

அத்லெட்டிகோ மட்ரிட், ஜேர்மனியச் சம்பியன்களான பெயார்ண் மியூனிச் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, அத்லெட்டிகோவின் யனிக் கராஸ்கோ பெற்றிருந்தார். அத்லெட்டிகோவுக்கு கிடைக்கப் பெற்ற பெனால்டியை அந்தோணி கிறீஸ்மன் தவறவிட்டிருந்ததுடன், பெர்ணான்டோ டொரஸும் இலகுவான வாய்ப்பொன்றை தவறவிட்டிருந்தார். பெயார்ண் சார்பாக, பிராங் றிபெரி, ரொபேர்ட் லெவன்டோஸ்கி ஆகியோர் நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தார்.

பார்சிலோனா, ஜேர்மனிய அணியான பொரிஸ்ஸா மொன்சன்கிளட்பா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், ஒரு கோல் பின்தங்கியிருந்த பார்சிலோனா, இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பார்சிலோனா சார்பாக, சமப்படுத்தும் கோலை ஆர்டா துரான் பெற்றதோடு, வெற்றிக் கோலை ஜெராட் பிகே பெற்றார்.

ஆர்சனல், சுவிற்ஸர்லாந்து சம்பியன்களான பேஸில் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் ஆர்சனல் வென்றிருந்தது. ஆர்சனல் சார்பாக பெறப்பட்ட இரண்டு கோல்களுக்குமான பரிமாற்றங்களை அலெக்ஸிஸ் சந்தேஸ் வழங்க, இரண்டு கோல்களையும் தியோ வொல்கொட் பெற்றிருந்தார்.

பிரான்ஸ் சம்பியன்களான பரிஸா ஜேர்மாவுக்கும் பல்கேரிய அணியான லுடோகொரேட்ஸுக்குமிடையிலான போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் பரிஸா ஜேர்மா வெற்றி பெற்றது. அவ்வணி சார்பாக, எடின்ஸன் கவானி இரண்டு கோல்களையும் பிளெய்ஸி மத்தியூடி ஒரு கோலினையும்ந பெற்றனர்.

இத்தாலிய அணியான நாபோலி, போர்த்துக்கல் அணியான பெய்பிக்காவை 4-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்திருந்தது. நாபோலி சார்பாக, ட்ரையிஸ் மெர்ட்டென்ஸ் இரண்டு கோல்களையும், அணித்தலைவர் மரேக் ஹம்ஸிக், அர்கடியுஸ் மிலிக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர்.

மன்செஸ்டர் சிற்றி, ஸ்கொட்லாந்து அணியான செல்டிக் அணிகளுக்கிடையிலான போட்டியில், மூன்று தடவை பின்தங்கியிருந்த சிற்றி, இறுதியில், 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது. சிற்றி சார்பாக, பெர்ணான்டின்ஹோ, ரஹீம் ஸ்டேர்லிங், நொலிட்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .