2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தாக்கூரும் மனோகரும் வாய்த்தர்க்கம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அநுரக் தாக்கூருக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளர் ஷஷாங் மனோகருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தொடர்பாக மனோகர் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்தே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் சபைக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், கருத்துத் தெரிவித்திருந்த மனோகர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நலன்கள் தொடர்பாகக் கவனமெடுப்பது, தனது பணியல்ல எனவும் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைப் பிரதிநிதியின் பணியெனவும் தெரிவித்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தவிசாளராக மனோகர் தெரிவானதைத் தொடர்ந்து, அவர் வகித்த இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு வந்த அநுரக் தாக்கூர், அவரது இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார். லோதா குழுவின் பரிந்துரைகளும் சர்வதேச கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக, இந்திய கிரிக்கெட் சபைக்குத் தலைவலியைத் தருவதாக அவர் தெரிவித்தார். ஒரேயொரு பரிந்துரைக்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, காத்திரமாகக் கருதப்படவில்லை எனவும் அவர் விசனத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரில் 49 நாட்களில் 56 போட்டிகள் இடம்பெற்ற நிலையில், 20 நாட்களில் 15 போட்டிகள் இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் லீக் தொடருக்கு, உலக இருபதுக்கு-20 தொடருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை விட 3 மடங்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய தாக்கூர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்காக மாத்திரமன்றி, சர்வதேச கிரிக்கெட் சபையிலுள்ள 105 நாடுகளுக்ககவும் இதைக் கோருவதாகவும் தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .