2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

துடுப்பாட்டப் பிரச்சினைகள்: கிறிஸ் றொஜர்ஸுக்கு அவசர அழைப்பு

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 13 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் திறமை வெளிப்பாட்டுப் பிரதானி பற் ஹோவார்ட், முன்னாள் துடுப்பாட்ட வீரரான கிறிஸ் றொஜர்ஸுக்கு, அவசர அழைப்பொன்றை விடுத்துள்ளார். அணியின் துடுப்பாட்ட வீரர்கள், எவ்வாறு முன்னேற்றமடைவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி, அதன் பின்னர் இலங்கையில் வைத்து 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்ததுடன், பின்னர் தென்னாபிரிக்காவில் வைத்து ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 0-5 என்ற கணக்கில் இழந்திருந்தது. தற்போது இடம்பெற்றுவரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதலாவது போட்டியில் தோல்வியுற்ற அவ்வணி, இரண்டாவது போட்டியின் முதல் இனிங்ஸில் 85 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இந்நிலையிலேயே, துடுப்பாட்ட வீரர்களின் மோசமான பெறுபேறுகளையடுத்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, றொஜர்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டப் பெறுபேறுகள் தொடர்பாகத் தொலைக்காட்சியில் கருத்துத் தெரிவித்திருந்த றொஜர்ஸ், "வழக்கமான அணிகளில், விக்கெட்டுகள் வீழ்த்தப்படும் போது, அதிலிருந்து மீள்வதற்கான போராட்டம் காணப்படும். அவுஸ்திரேலியாவில் அது, தொடர் விக்கெட் இழப்பாகக் காணப்படுகிறது. அடிப்படையில் ஏதோ பிரச்சினை காணப்படுகிறது. அவர்களிடம் தன்னம்பிக்கை காணப்படுகிறது. திறமை தொடர்பாகக் கேள்வியில்லை. ஆனால், அவர்களால் போராட முடியவில்லை" என்று தெரிவித்தார். அவரது இவ்வாறான கருத்துகளால் ஈர்க்கப்பட்டே, பற் ஹோவார்டினால் இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தானும் தேசிய அணித் தேர்வாளர்களும் பயிற்றுநர் டெரன் லீமனும், அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பதை ஏற்றுக் கொண்ட ஹோவார்ட், முடிவுகளில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால், தங்கள் வேலைகள் பறிபோகும் என்பதை ஏற்றுக் கொள்வதான சமிக்ஞைகளையும் வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .