2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நொக் அவுட் சுற்றில் றியல் மட்ரிட், மன்செஸ்டர் சிற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 04 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், நொக் அவுட் சுற்றுத் தொடருக்குள்நுழையும் முதல் அணிகளாக, றியல் மட்ரிட் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும் மாறியுள்ளன.

குழுநிலைப் போட்டிகளில், செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றே, அவ்விரு அணிகளும் நொக் அவுட்டுக்குள் நுழைந்தன. தவிர, மன்செஸ்டர் யுனைட்டட் அணியும் வெற்றிபெற்றது.

றியல் மட்ரிட் அணிக்கும் பரிஸ் செய்ன்ற் ஜேர்மைன் அணிக்குமிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வெற்றிபெற்றது. போட்டியில் முதற்பாதியில், கோல்களைப் பெறுவதற்கான வாய்ப்பினை பரிஸ் செய்ன்ற் ஜேர்மைன் அணி கொண்டிருந்த போதிலும், அவ்வணி அவற்றைத் தவறவிட்டிருந்தது.

பின்னர், போட்டியின் 33ஆவது நிமிடத்தில், றியல் மட்ரிட் அணியின் மார்செலோவுக்கு உபாதை ஏற்பட, அவருக்குப் பதிலாக நாச்சோ களமிறங்கினார். அவர் களமிறங்கிய இரண்டு நிமிடங்களிலேயே, றியல் மட்ரிட் அணிக்கான கோலைப் பெற்றுக் கொடுத்தார். அதுவே, வெற்றிக்கான கோலாகவும் மாறியது.

மன்செஸ்டர் சிற்றி அணிக்கும் செவில்லா அணிக்குமிடையிலான போட்டியில், மன்செஸ்டர் சிற்றி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆரம்பத்திலேயே சிறப்பாக ஆடிய மன்செஸ்டர் சிற்றி அணி, 8ஆவது நிமிடத்தில் றஹீம் ஸ்டேர்லிங் பெற்ற கோலின் உதவியுடன் முன்னிலை பெற, மூன்றே நிமிடங்களில் பெர்னாண்டின்ஹோ பெற்ற கோலின் உதவியுடன், 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் பெனொய்ட் ட்ரெமொலினாஸ், கோலொன்றைப் பெற்று, போராட்டத்தை வழங்கிய போதிலும், 36ஆவது நிமிடத்தில் வில்பிரட் பொனி பெற்ற கோலினால், 3-1 என்ற முன்னிலையை, அவ்வணி பெற்றது. இரண்டாவது பாதியில், இரு அணிகளுமே கோலொதனையும் பெறாது போக, மன்செஸ்டர் சிற்றி அணி, 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் சி.எஸ்.கே.ஏ மொஸ்கோ அணிக்குமிடையிலான போட்டியில், மன்செஸ்டர் யுனைட்டட் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் முதலாவது பாதியில், கோலெவையும் பெறப்படாத நிலையில், 79ஆவது நிமிடத்தில், யுனைட்டட் அணியின் தலைவர் வெய்ன் றூணி, கோலொன்றைப் பெற்று, தனது அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .