2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

போராடுகிறது இங்கிலாந்து; முன்னிலையில் இந்தியா

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 20 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், விசாகப்பட்டினத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய நான்காவது நாள் ஆட்டநேர முடிவின்போது, 405 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற இங்கிலாந்து அணி, இரண்டு விக்கெட்டுகளையிழந்து 87 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், ஜோ ரூட் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளார். நேற்றைய ஆட்டத்தின் இறுதிப் பந்தில், 54 ஓட்டங்களுடன் அலிஸ்டியர் குக் ஆட்டமிழந்தார். இது தவிர, ஹசீப் ஹமீட் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், இந்தியாவில் வைத்து 387 ஓட்டங்களுக்கு அதிகமாக நான்காவது இனிங்ஸில் பெற்று எந்தவொரு அணியும் வெற்றி பெறவில்லையென்ற நிலையில், ஐந்தாம் நாள் ஆடுகளத்தில் இங்கிலாந்து அணியால் 318 ஓட்டங்களைப் பெறமுடியுமா என்பது பாரிய கேள்விக்குறியாக காணப்படுகையில், இந்திய அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் காணப்படுகின்றன.

முன்னதாக, தமது இரண்டாவது இனிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களுடன் நேற்றைய நான்காம் நாளை ஆரம்பித்த இந்திய அணி, 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், விராத் கோலி 81, ஜயந்த் யாதவ் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸ்டுவேர்ட் ப்ரோட், அடில் ரஷீட் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

இந்திய அணி, விராத் கோலியின் 167, செட்டேஸ்வர் புஜாராவின் 167, இரவிச்சந்திரன் அஷ்வினின் 58, ஜயந்த் யாதவ்வின் 35 ஓட்டங்களின் துணையோடு 455 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் குவித்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் 70, ஜோ ரூட், ஜொனி பெயார்ஸ்டோ ஆகியோரது தலா 53 ஓட்டங்களின் துணையோடு, 255 ஓட்டங்களையே தமது முதலாவது இனிங்ஸில் இங்கிலாந்து அணி பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .