2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

போர்ண்மெத்துடனான போட்டியைச் சமப்படுத்தியது ஆர்சனல்

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 04 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று (03) இடம்பெற்ற போட்டியொன்றில், 70 நிமிடங்கள் வரையில் மூன்று கோல்கள் பின்தங்கியிருந்த ஆர்சனல், போட்டியின் மேலதிக நிமிடங்களில் ஒலிவர் ஜிரோட்டினால் பெறப்பட்ட கோலுடன் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

அந்தவகையில், போர்ண்மெத்துடனான மேற்கூறப்பட்ட போட்டியை, 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்ட ஆர்சனல், இப்போட்டியின் மூலம் ஒரு புள்ளியைப் பெற்று, 41 புள்ளிகளுடன், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில், நான்காமிடத்தில் தொடருகிறது. 42 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும், 44 இரண்டாமிடத்தில் லிவர்பூலும், 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன.

ஆர்சனலின் ஹெக்டர் பெல்லெரினைத் தாண்டி, ஓடி வந்த கோல் காப்பாளர் பீற்றர் செக்கையும் தாண்டி, போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சார்லி டேனியல்ஸ் பெற்ற கோலின் மூலமாக போர்ண்மெத் முன்னிலை பெற்றது. பின்னர், போட்டியின் 58ஆவது நிமிடத்தில் கலும் வில்சன் பெனால்டி மூலம் பெற்ற கோலினால் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின்னர், பீற்றர் செக்கின் கால்களினூடு றயான் பிறேஸர் பெற்ற கோலின் காரணமாக 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற போர்ண்மெத், எதிரணியின் மைதானங்களில், மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியை ஆர்சனலுக்கு போர்ண்மெத் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், ஒலிவர் ஜிரோட்டிடமிருந்து வந்த பந்தை, பாய்ந்து தலையால் முட்டி அலெக்சிஸ் சந்தேஸ், போட்டியின் 70ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் ஆர்சனலின் மீள்வருகை ஆரம்பமாகியது. குறித்த கோலுடன் 1-3 என்ற கோல் கணக்கில் காணப்பட்டது. பின்னர், அடுத்த ஐந்து நிமிடத்தில், ஜிரோட் வழங்கிய பந்தை மாற்று வீரர் லூகாஸ் பெரேஸ் பெற்ற கோலின் மூலம் 2-3 என்றவாறு கோல் எண்ணிக்கையை கொண்டுவந்த ஆர்சனல், போட்டியின் இரண்டாவது மேலதிக நிமிடத்தில், கிரனிட் ஸாகாவிடமிருந்து பெற்ற பந்தை ஜிரோட் கோலாக்க 3-3 என்ற கோல் கணக்கில், போட்டியை சமநிலையில் ஆர்சனல் முடித்துக் கொண்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .