2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ் குழாமுக்குத் திரும்பினார் முஸ்தபிஸுர்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் பங்களாதேஷ் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸுர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இறுதியாக, இவ்வாண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற உலக இருபதுக்கு – 20 தொடரிலேயே, சர்வதேசப் போட்டியொன்றில் முஸ்தபிஸுர் விளையாடியிருந்தார். அதன்பின்னர், இவ்வாண்டு ஜூலை மாதம் தோட்பட்டை காயத்துக்குள்ளான முஸ்தபிஸுர், இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் சத்திர சிகிச்சைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. பின்னர், இம்மாத ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பயிற்சி முகாமில் கலந்துகொண்டிருந்தார்.

முஸ்தபிஸுர் தவிர, வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொஸைனும் குழாமுக்குத் திரும்பியுள்ளார். போதிய உடற்றகுதியின்மை காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் சேர்க்கப்படாத ருபெல், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷகிட்டின் பிரதியீடாக பயிற்சிக் குழாமில் இடம்பெற்றிருந்தார்.

இதேவேளை, சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் மெஹெடி ஹொஸைன், புறச் சுழற்பந்து வீசக்கூடிய துடுப்பாட்ட வீரர் தன்பீர் ஹைதர், வேகப்பந்து வீச்சாளர் சுபாஷிஷ் றோய் ஆகியோர் முதற்தடவையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

மறுபக்கம், சகலதுறை வீரர் நசீர் ஹொஸைன், வேகப்பந்து வீச்சாளர்களான  ஷபிகுல் இஸ்லாம், அல்-அமின் ஹொஸைன், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் தஜிகுல் இஸ்லாம் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை. இதில், ஷபிகுல் இஸ்லாமுக்கு பின்தொடைத் தசைநார் காயம் என்பது குறிப்பிடத்தக்கது.

குழாம்: மஷ்ரபி மோர்ட்டசா (அணித்தலைவர்), தமீம் இக்பால், இம்ரல் கைஸ், சௌமியா சர்க்கார், சபீர் ரஹ்மான், முஷ்பிகூர் ரஹீம் (விக்கெட் காப்பாளர்), மஹ்முதுல்லா, ஷகிப் அல் ஹஸன், மொஷாடெக் ஹொஸைன், ருபெல் ஹொஸைன், தஸ்கின் அஹமட், முஸ்தபிஸுர் ரஹ்மான், மெஹெடி ஹொஸைன், சுபாஷிஷ் றோய், தன்பீர் ஹைதர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .