2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முதலாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அதிரடி; இலங்கை முன்னேற்றம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இன்றைய முதல்நாளில், நியூசிலாந்து அணி அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. எனினும் இறுதி நேரத்தில், இலங்கை அணி முன்னேற்றகரமான விளையாட்டை வெளிப்படுத்தியது.

டுனேடனில் இடம்பெறும் இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானதாகக் கருதப்பட்ட நிலையிலேயே, முதலில் பந்துவீசும் முடிவை, அஞ்சலோ மத்தியூஸ் எடுத்தார். ஆனால், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களால், சிறப்பான திறமையை வெளிப்படுத்தியிருக்க முடிந்திருக்கவில்லை.

நியூசிலாந்தின் முதலாவது விக்கெட், 56 ஓட்டங்களுக்கே வீழ்த்தப்பட்ட போதிலும், 2ஆவது விக்கெட்டுக்காக இணை சேர்ந்த மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்ஸன் ஜோடி, 38.5 ஓவர்களில் 173 ஓட்டங்களை அதிரடியாகப் பகிர்ந்தது. அதன் பின்னர், பிரென்டன் மக்கலத்தின் அதிரடி காரணமாக, முழுமையான ஆதிக்கத்தை அவ்வணி எட்டிய போதிலும், இறுதி 5 விக்கெட்டுகளும் 65 ஓட்டங்களுக்கே வீழ்த்தப்பட்டன. இதன்படி, முதல்நாள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 409 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில், மார்ட்டின் கப்டில் 156 (234), கேன் வில்லியம்ஸன் 88 (123), பிரென்டன் மக்கலம் 75 (57), டக் பிரேஸ்வெல் 32 (39) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர மூவரும் தலா 2 விக்கெட்டுகளையும் அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை இடம்பெறும் நிலையில், எஞ்சியுள்ள 2 நியூசிலாந்து விக்கெட்டுகளையும் வேகமாக வீழ்த்தி, சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை, இலங்கைக்குக் காணப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .