2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மெல்பேணில் ஓட்ட மழை; அஸார் 205; வோணர் 144

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்டடெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, பாரிய திருப்பங்கள் ஏற்பட்டாலொழிய, வெற்றி - தோல்வியற்ற முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 6 விக்கெட்டுகளை இழந்து 310 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்று, தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. இதில், ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி சார்பாக 8ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அஸார் அலியும் சொஹைல் கானும், 108 ஓட்டங்களைப் பகிர்ந்து, அணிக்கு முன்னிலையை வழங்கினர்.

இதில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அஸார் அலி, ஆட்டமிழக்காமல் 205 ஓட்டங்களைப் பெற்றார். இவ்வாண்டில் ஏற்கெனவே முச்சதமொன்றைப் பெற்ற அஸார் அலி, இதுவரையில் 3 தடவைகள், இரட்டைச் சதத்தைத் தாண்டியுள்ளார். ஏனையோரில் சொஹைல் கான் 65, அசத் ஷபீக் 50 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட், ஜக்ஸன் பேர்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 46 ஓட்டங்கள் பகிரப்பட, 2ஆவது விக்கெட்டுக்காக, 198 ஓட்டங்கள் பகிரப்பட்டன. துடுப்பாட்டத்தில் டேவிட் வோணர், 143 பந்துகளில் 144 ஓட்டங்களைக் குவித்தார். இது, டெஸ்ட் போட்டிகளில் அவரது 17ஆவது சதமாகும். தவிர, உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 95 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகிறார்.

போட்டியில் இன்னமும் 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில், வெற்றி - தோல்வியற்ற முடிவே பெறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான முடிவு பெறப்பட்டால், மெல்பேண் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இறுதி 17 போட்டிகளுக்குப் பின்னர், வெற்றி - தோல்வியற்ற முடிவு பெறப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .