2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரொனால்டோ அபாரம்: இறுதிக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 07 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக போர்த்துக்கல் நுழைந்துள்ளது. இது, யூரோ கிண்ண, இறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் நுழையும் இரண்டாவது சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னர் 2000ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தது.

இப்போட்டிக்கு முன்னரே, இப்போட்டியானது, போர்த்துக்கல் எதிர் வேல்ஸ் என்பதுக்கு மேலதிகமாக, ரொனால்டோ எதிர் பேல் என்றே பார்க்கப்பட்ட நிலையில், ரொனால்டோவின் அதிரடி கைகொடுக்க, போர்த்துக்கல், 2-0 என்ற கோல்கணக்கில் வேல்ஸை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்து கொண்டது.

போட்டியின் முதற்பாதியில், இரண்டு அணிகளுக்கும் சொல்லிக் கொள்ளும் படியாக கோல் பெறும் வாய்ப்புகள் அமைந்திருக்கவில்லையென்ற போதும் போர்த்துக்கல் அணியே அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அவ்வணியின் மத்திய பின்கள வீரர் பெப்பே, காயம் காரணமாக அணியில் இடம்பெறாத போதும், இது பெரியளவு பாதகத்தை போர்த்துக்கல்லுக்கு வழங்கியிருக்கவில்லை. மறுபக்கம், இரண்டு தடவை மஞ்சள் அட்டை காட்டப் பெற்றமை காரணமாக, இப்போட்டியில் விளையாட முடியாமல் போன ஆரோன் றாம்ஸீயின் இழப்பு, வேல்ஸை அதிகமாகவே பாதித்திருந்தது. அவ்வணி, தடுப்பாட்டத்திலேயே பெரும்பான்மையான நேரங்களில் கவனஞ் செலுத்தியிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே, 50ஆவது நிமிடத்தில் கிடைத்த ‘கோணர்’ ஒன்றினை, உயர எழும்பி, தலையால் முட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, அபாரமாகக் கோலாக்கி, தனது அணிக்கு முன்னிலையை வழங்கியதுடன், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் நானிக்கு சாதுர்யமான பந்துப் பரிமாற்றமொன்றை வழங்க, நானி அதைக் கோலாக்க, அடுத்தடுத்த இரண்டு கோல்களினால் வேல்ஸ் துவண்டு போனது.

அதற்குப் பின்னர், வேல்ஸினால் மீள் எழுகையை நிகழ்த்த முடியாமல் போனதுடன், கரேத் பேல் தூரத்திலிருந்து அடித்த பந்துகளும் போர்த்துக்கல் கோல்காப்பாளர் ரூய் பற்றிசியோவின் கைகளுக்குள்ளேயே சென்றிருந்தது. மறுபக்கம், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ‘பிறீ கிக்’ ஒன்று கோல்கம்பத்துக்கு மேலாக சென்றதுடன், டனிலோவின் உதையொன்று வேல்ஸ் கோல்காப்பாளரினால் தடுக்கப்பட்டது உள்ளடங்கலாக போர்த்துக்கல்லே கோல் பெறும் வாய்ப்புகளை மேலும் உருவாக்கியிருந்தது.

இப்போட்டியில் பெற்ற கோலுடன் சேர்த்து, யூரோ போட்டிகளில் அதிக கோல்கள் பெற்றவர் என்ற பிரான்ஸின் மைக்கல் பிளட்டினியின் சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ சமன் செய்துள்ளார். தற்போது இருவரும் ஒன்பது கோல்களுடன் காணப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .