2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரஷ்யாவின் உலகக்கிண்ண வாய்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டது

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடாக, வாக்கெடுப்புக்கு முன்னரே ரஷ்யா தெரிவுசெய்யப்பட்டதாக, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இடைநிறுத்தப்பட்டுள்ள தலைவரான செப் பிளட்டர் தெரிவித்துள்ளார்.

2018, 2022ஆம் ஆண்டுகளின் உலகக் கிண்ணங்களை முறையே ரஷ்யாவுக்கும் கட்டாருக்கும் வழங்குவதற்கு எடுத்த முடிவு, பலத்த சந்தேகங்களை முன்னர் எழுப்பியிருந்த நிலையில், பிளட்டரின் இக்கருத்துக்கள், அவற்றின் மீது மேலும் அதிக சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

'2010ஆம் ஆண்டில் நாமொரு கலந்துரையாடலை நடாத்தினோம். அதில், இரண்டு முடிவுகளை எடுத்தோம். அதன்படி, உலகக் கிண்ணத்துக்காக ரஷ்யாவைத் தெரிவுசெய்வதென முடிவெடுத்தோம், ஏனெனில், ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இதற்கு முன்னர் உலகக் கிண்ணம் நடாத்தப்பட்டிருக்கவில்லை. அதேபோல், 2022ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை ஐக்கிய அமெரிக்காவில் நடாத்த முடிவெடுத்தோம். இதன்படி, உலகின் மிகப்பெரிய 2 அரசியல் சக்தியுள்ள நாடுகளில், உலகக் கிண்ணங்கள் நடந்திருக்கும்" என பிளட்டர் தெரிவித்தார்.

எனினும், பிரான்ஸின் ஜனாதிபதி நிக்கொலஸ் சார்க்கோஸி, அந்தத் திட்டத்தைக் குழப்பியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
'கட்டாரின் அப்போதை முடிக்குரிய இளவரசருடன் (தற்போதைய ஆட்சியாளர் அவர்) கூட்டமொன்றுக்கு சார்க்கோஸி வரும்வரை, எல்லாமே சரியாக நடந்து கொண்டிருந்தன. பிளட்டினியுடனான (ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர்) விருந்துபசாரத்தின் போது, கட்டாரைத் தெரிவுசெய்வது சிறப்பானது என அவர் தெரிவித்தார். இது, எல்லாவற்றையும் மாற்றியது.

இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது. ஐரோப்பாவிலிருந்தான நான்கு வாக்குகள், அமெரிக்காவை விட்டுச் சென்றதன் காரணமாக, 14-8 என்ற நிலை ஏற்பட்டது. அந்த நான்கு வாக்குகளையும் சேர்த்தால், 12-10 (அமெரிக்காவுக்கு) என்ற நிலை ஏற்பட்டிருக்கும். அமெரிக்காவுக்கு உலகக் கிண்ணத்தை வழங்கியிருந்தால், 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள அற்புதமான உலகக் கிண்ணம் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்போமே தவிர, பீபாவிலுள்ள பிரச்சினைகள் பற்றியல்ல" எனத் தெரிவித்தார்.

பிளட்டர் மீதான குற்றச்சாட்டுகளை வெளிக் கொணர்வதில் அமெரிக்கா அதிக பங்களிப்பை வழங்கிய நிலையில், பிளட்டரின் புதிய கருத்துக்கள், உலகக் கிண்ணங்களை வழங்கும் நடைமுறை தொடர்பாக அதிக கேள்விகளை எழுப்பி வைத்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .