2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

றொஜர்ஸ் கிண்ணம்: ஆண்களில் சம்பியனானார் ஜோக்கோவிச்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் டொரன்டோவில் இடம்பெற்றுவந்த றொஜர்ஸ் கிண்ணத்தின் ஆண்கள் பிரிவின் சம்பியனாக, உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் தெரிவாகியுள்ளார். உலகின் 6ஆம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியைத் தோற்கடித்தே, இந்த வெற்றியை அவர் பெற்றுக் கொண்டார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், நடப்புச் சம்பியனாக நுழைந்த நொவக் ஜோக்கோவிச், 3ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அவர் பங்குபற்றிய முதலாவது தொடராக இது அமைந்திருந்தது.

முதலாவது செட்டில் அதிரடியாக விளையாடிய ஜோக்கோவிச், 30 நிமிடங்களளவில், அந்த செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றில், நிஷிகோரியிடமிருந்து போட்டியை எதிர்கொண்ட அவர், 5-5 என்ற நிலையிலிருந்து, கடுமையாகப் போராடி 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த செட்டைக் கைப்பற்றி, வெற்றிபெற்றுக் கொண்டார்.

இதன்மூலம், உலகின் 4ஆம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு நுழைந்த நிஷிகோரியின் சம்பியன் கனவு கலைக்கப்பட்டது. ஜோக்கோவிச்சின் இந்த வெற்றி, ஏ.டி.பி உலகச் சுற்றுலாத் தொடரொன்றில் அவர் கைப்பற்றிய 30ஆவது சம்பியன் பட்டமாகும்.

இதில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், அவர் கவனஞ்செலுத்தவுள்ளார்.  2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அவர், 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் எதனையும் பெற்றிருக்கவில்லை. ஆனால், உலகின் முதல்நிலை வீரராக, உலகில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் வீரராக மாறியுள்ள ஜோக்கோவிச், இம்முறை தங்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்குகிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .