2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

றியோ ஒலிம்பிக்: எலைனி தொம்ஸனுக்கு மீண்டும் தங்கம்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றிருந்த எலைனி தொம்ஸன், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.

24 வயதான தொம்ஸன், நெதர்லாந்தின் உலக சம்பியனான டவ்னி ஷிப்பர்ஸை 0.13 செக்கன்களினால் தோற்கடித்து, போட்டித் தூரத்தை 21.78 செக்கன்களில் கடந்து தங்கம் வென்றார். போட்டித் தூரத்தை 22.15 செக்கன்களில் கடந்த ஐக்கிய அமெரிக்காவின் தோரி பூயி வெண்கலப் பதக்கம் வென்றார்.

1988ஆம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் போட்டிகளின் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்காவின் ஃபுளோரன்ஸ் கிறிஃபித் ஜொய்னர் தங்கம் வென்ற பின்னர், ஒலிம்பிக் 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கம் வென்ற முதலாவது பெண்மணியாக தொம்ஸன் மாறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இறுதியாக இடம்பெற்ற 11, 100 மீற்றர், 200 மீற்றர் ஓட்டப் போட்டிகள் 10இல் ஜமைக்காவே தங்கம் வென்றுள்ளது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த தொம்ஸன், இது மிகவும் சிறப்பான மற்றும் வரவேற்கத்தக்க உணர்வாக இருந்தது எனத் தெரிவித்திருந்ததுடன், தனது விளக்கு பிரகாசித்துள்ளதாக தான் நினைப்பதாக கூறியுள்ளார். வெரோனிக்கா கம்பெல்-பிறவுண், ஷெலி-ஆன் ஃபிறேஸர்-பிறைஸ் ஆகியோரை பார்த்து விட்டு, தனது பெயரை அங்கு இடுவது மிகச் சிறந்த உணர்வு என மேலும் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 200 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற கம்பெல்-பிறவுண், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அத்தங்கத்தை தக்க வைத்ததுடன், 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக், 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ஃபிறேஸர்-பிறைஸ் தங்கம் வென்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .