2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

லோதா செயற்குழுவின் பரிந்துரைகள்: உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறது BCCI

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 02 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் (BCCI) ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக லோதா செயற்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானவற்றைத் தவறவிட்டுள்ள அச்சபை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் செயற்பட்டுள்ளது.

இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் ஏற்பட்ட முறைகேடுகளைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் சபையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துமுகமாக, நீதியரசர் லோதா தலைமையில் செயற்குழுவொன்று அமைக்கப்பட்டது. அச்செயற்குழுவும், ஏராளமான பரிந்துரைகளை முன்வைத்தது. அவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர, ஏனையவற்றை ஏற்ற உச்சநீதிமன்றம், அவற்றைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிவித்தது.

எனினும், நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கூட்டத்தில், இது தொடர்பாக ஆராயப்பட்டு, சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டன. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, "லோதா செயற்குழுவால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான பரிந்துரைகளை ஏகோபித்தமாக ஏற்றுக் கொண்டோம்" என அறிவித்தது.

ஆனால், முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமான சில பரிந்துரைகளை, அச்சபை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, சபையின் அதிகாரிகளுக்கு அதிகபட்ச வயதான 70 வயது இருக்க வேண்டும்; சபையின் அதிகாரிகளாகப் பதவி வகிப்போர், மொத்தமாக 9 ஆண்டுகளுக்கே பதவி வகிக்க வேண்டும். அதில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடைவெளி வேண்டும்; ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு போன்றவற்றை, அச்சபை ஏற்கவில்லை.

இது, "அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்துவதாகும். இதன்மூலம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்ப்பதற்கு, அச்சபை தயாராகி விட்டதாகவே கருதப்படுகிறது.

எனினும் கருத்துத் தெரிவித்த சபையின் தலைவர் அநுரக் தாக்கூர், உறுப்பினர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள், எதற்காகச் சில பரிந்துரைகள் ஏற்கப்பட்டன, எதற்காக சில பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை போன்ற விடயங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்று, உச்சநீதிமன்றத்துக்கும் லோதா செயற்குழுவுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .