2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

லக்மாலுக்கு அபராதம்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 22 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புத் தொடரில், சிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பாக, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில் 13.3 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டு, போட்டி தொடர்ந்திருக்கவில்லை. அதற்குள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே லக்மால் சிக்கியுள்ளார்.

போட்டியின் 2ஆவது ஓவரை வீசிய லக்மால், 3ஆவது பந்தைத் துடுப்பாட்ட வீரர், தன்னை நோக்கி அடிக்க, அதை எடுத்து, விக்கெட்டை நோக்கி எறிந்தார். ஆனால் துடுப்பாட்ட வீரரான சமு சிபாபாவை நோக்கியே அப்பந்து சென்றது. துடுப்பாட்ட வீரர், ஆடுகளக் கோட்டுக்குள்ளேயே இருந்ததோடு, ஓட்டமொன்றைப் பெற முனைந்திருக்கவில்லை.

அந்தப் பந்து, துடுப்பாட்ட வீரரின் படாமல், விக்கெட் காப்பாளரிடம் சென்ற போதிலும், லக்மாலின் செயற்பாடு, விளையாட்டு உணர்வுகளுக்கு எதிரானது என்று முடிவுசெய்த சர்வதேச கிரிக்கெட் சபை, அவரின் போட்டி ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்தது.

அதற்கு மேலதிகமாக, அவருக்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டன. அடுத்த 24 மாதகாலத்தில், மேலுமிரு புள்ளிகள் கழிக்கப்பட்டால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அல்லது 2 இருபதுக்கு சர்வதேசப் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .