2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வென்றது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இங்கிலாந்தில் இடம்பெற்று வரும்  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், மன்செஸ்டர், ஓல்ட் டிராஃப்போர்ட்டில் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை தக்கவைத்துள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, இப்போட்டியில் உப அணித்தலைவராக பதவியுயர்த்தப்பட்ட ஜேம்ஸ் டெய்லர் 101 ஓட்டங்களை பெற்று தனது கன்னிச் சதத்தை பெற்றார். தவிர தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ரோய் 63 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஒயின் மோர்கன் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக பற் கம்மின்ஸ், கிளன் மக்ஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், அஸ்தன் அகர், மிட்செல் ஸ்டார்க் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 44 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச் 53 ஓட்டங்களையும், மத்தியு வேட் 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், ஜோர்ஜ் பெய்லி தலா 25 ஓட்டங்களை பெற்றனர்.

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் மொயின் அலி தனது 10 ஓவர்களில் ஒரு ஓட்டமற்ற ஓவர் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது சிறந்த பெறுதியை பெற்றதோடு‌, லியாம் பிளங்கெட்டும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததோடு, அடில் ரஷீத், ஸ்டீவன் ஃபின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் நாயகனாக இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் டெய்லர் தெரிவானார். இரு அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் சர்வதேசப்போட்டி நாளை மறுதினம் லீட்ஸில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .