2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

வெற்றிவாய்ப்பை நழுவ விட்டதா இலங்கை?

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முன்னிலை பெற்று, வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

ஆனால், இளம் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீரவின் சிறப்பான பந்துவீச்சினால், இலங்கை அணி இன்னமும் போட்டியை வெளிப்படுத்தி வருகின்றது.

9 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, போட்டியின் முதலாவது ஓவரின் 5ஆவது பந்திலேயே, தனது இறுதி விக்கெட்டை இழந்தது. அவ்வணி, 237 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மார்ட்டின் கப்டில் 50, மிற்சல் சான்ட்னெர் 38, டக் பிரேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 35, பி.ஜே வற்லிங் 29, டொம் லேதம் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், துஷ்மந்த சமீர 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, நுவான் பிரதீப், ரங்கன ஹேரத் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

55 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இலங்கை அணி, விக்கெட் எதனையும் இழக்காமல் 71 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை, 133 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்துது.

துடுப்பாட்டத்தில் குசால் மென்டிஸ் 46, திமுத் கருணாரத்ன 27, மிலிந்த சிரிவர்தன 26 ஓட்டங்களைப் பெற்றனர். வேறு எவரும், இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் டிம் சௌதி 4, நீல் வக்னர் 3, டக் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, துஷ்மந்த சமீரவின் வேகப்பந்து வீச்சில் சிக்கி, முதலிரு விக்கெட்டுகளையும் இழந்து, 11 ஓட்டங்களுடன் தடுமாறியது. ஆனால், றொஸ் டெய்லர், கேன் வில்லியம்ஸன் இருவரும் 67 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட்டுக்காகப் பகிர்ந்தனர்.

இறுதியில், இன்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன்படி, 5 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 47 ஓட்டங்களை நியூசிலாந்து பெற வேண்டியுள்ளது.

துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்ஸன் ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் றொஸ் டெய்லர் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில், துஷ்மந்த சமீர 4 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .