2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

நாளொன்றுக்கு ஆறுபேர் வீதி விபத்துக்களால் மரணம்; கடந்த வருடம் 2425 மரணங்கள்

A.P.Mathan   / 2013 மார்ச் 02 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் டிசெம்பர் மாதம்வரை ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி 2425 பேர் இறந்துள்ளனர், 9624 பேர் மிகப் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் கூடுதலானோர் அங்கவீனத்துக்கு உள்ளாகி அவஸ்தைப்படுகின்றனர், மேலும் 14410 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன, விபத்துக்களினால் 18054 சொத்து இழப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக கடந்த வருடத்தில் மாத்திரம் 42088 வீதி விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என கொழும்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி ரஷிக ரத்னாயக்க கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் கொழும்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினால் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பாதுகாப்பான விபத்துக்களற்ற பயணம் என்ற பயிற்சி நெறியில் அவர் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பரவின் ஏற்பாட்டில் இந்த போக்குவரத்து பொலிஸ் பயிற்சிப் பிரிவு கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.

ஏறாவூர் மத்தி கல்வி வலயம் மற்றும் ஏறாவூர்ப் பற்று மேற்கு கல்வி வலயம் ஆகியவற்றின் 12 பாடசாலைகளிலிருந்து சுமார் ஐந்நூறிற்கு மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான விபத்துக்களற்ற பயணம் என்ற இந்தப் பயிற்சி நெறியில் பங்குபற்றியிருந்தனர்.

பாதுகாப்பான வீதிப்பயணம் மற்றும் பாதுகாப்பற்ற வீதிப்பயணம் என்பனவற்றைச் சித்தரிக்கும் வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டிருந்தது.

கொழும்பு பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பொலிஸ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஐ. ஜயசுந்தர ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி. பெரேரா உட்பட பொலிஸ் போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் பலரும் இந்தப் பயிற்சி நெறியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளை வழங்கினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .