2026 மே 04, திங்கட்கிழமை

காவத்தமுனை அல் - அமீன் வித்தியாலய மாணவர்கள் 2ஆவது நாளாகவும் வகுப்பு பகிஷ்கரிப்பு

Super User   / 2012 மே 09 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள காவத்தமுனை அல் - அமீன் வித்தியாலய மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமையும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி குறித்த பாடசாலை மாணவர்கள் நேற்று வகுப்புக்களை பகிஷ்கரித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் இம்மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாணவர்களின் பகிஷ்கரிப்பு தொடரும் என பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.கலீல் றகுமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இப்பாடசாலைக்கு 35 ஆசிரியர்கள் தேவைப்பட்ட போதிலும் 22 ஆசிரியர்களே தற்போதுள்ளனர். கடந்த மூன்றரை வருடங்களில் ஏழு ஆசிரியர்கள் இப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் மாற்றீடாக எந்தவொரு ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை.

இப்பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால் மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இப்பாடசாலையில் முக்கியமான சில பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாமலுள்ளது. இப்பாடசாலைக்கு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு பல தடவைகள் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் அவை நிறைவேற்றப் படவில்லை இதனாலேயே இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் இம் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் என்ற வகையில் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை தொடர்புகொண்ட போதுஇ அவர் சரியாக பதிலளிக்கவில்லை" என்றார்.

இந்த கோரிக்கை தொடர்பில் பாடசாலைக்கு மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் சமூகம் கொடுத்து இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்த போதிலும் அவர் சமூகமளிக்கவில்லை எனவும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பாடசாலை இன்று புதன்கிழமை திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் யாரும் சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .