2025 மே 03, சனிக்கிழமை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை; மார்ச் 20இல் கிழக்கில் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 01 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் கிழக்கு மாகாணத்திற்கான முதலாம் அமர்வு இம்மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1990 – 2009ஆம் ஆண்டு கால அசாதாரண சூழ்நிலையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.

வட மாகாணத்தில் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஓரளவு பூர்த்தியடைந்துள்ள நிலையில் தற்போது கிழக்கு மாகாணத்திலும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் பொதுமக்களுடன் நேரடியாக உரையாடி முறைப்பாடுகள் பெறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மார்ச் 3ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யும் ஆணைக்குழுவினர் ஆரம்பக் கட்டமாக மாவட்ட செயலாளர்களுடன் கலந்துரையாடுவார்கள் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவினரே விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைக் காலக்கெடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த  ஜனவரி 18 - 21ஆம் திகதிகளில் வடக்கு மாகாணம்  கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் 440 முறைப்பாடுகள் ஆணைக் குழுவிற்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெப்ரவரி மாதம் 14 - 17ஆம் திகதிவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் 984 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
 
நாடு முழுவதிலுமிருந்து மொத்தமாக 13,700 முறைப்பாடுகள் ஆணைக் குழுவிற்குக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளவர்களில் 9300 பொதுமக்களும் 4300 பாதுகாப்புப் படையினரும் அடங்குவதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச். டபிள்யூ. குணதாச மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X