2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

உன்னிச்சைக்குளத் திட்டத்தினூடாக 11,520 ஏக்கரில் சிறுபோகம் செய்ய நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 23 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


உன்னிச்சைக்குளம் நீர்ப்பாசனத் திட்டத்தினூடாக இவ்வருடம் 11,520 ஏக்கர் விவசாய நிலத்தில் சிறுபோக நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வெ.தவராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற சிறுபோகச் செய்கை ஆரம்பக் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி ஆயித்தியமலையில் இடம்பெற்ற முகாமைத்துவக் குழுக் கூட்டத்தின் போது மேற்படி 11,520 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிர்ச்தெசய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. இத்தீர்மானத்திற்கான அங்கீகாரத்தினை பிரதேச செயலகமும் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகமும் வழங்கியது.

இதற்கமைய மூன்று முதல் மூன்றரை மாத நெல் இனங்களை விதைக்க வேண்டும் எனவும் விவசாய வேலைகளை மார்ச் 2ஆம் திகதி ஆரம்பிப்பதெனவும் விவசாயக் காப்புறுதி செய்யும் இறுதித் திகதி ஏப்ரல் 14 எனவும் வேலி அமைக்க வேண்டிய இறுதித் திகதி ஏப்ரல் 14 எனவும் காவல் குடிசை அமைக்கும் இறுதித் திகதி  ஏப்ரல் 14 எனவும் ஆரம்ப நீர் விநியோகம் மார்ச் 10 எனவும் இறுதி நீர் விநியோகம் ஜூன் 30 எனவும் அறுவடை கொண்டு செல்லும் இறுதித் திகதி ஆகஸ்ட் 15 எனவும் வேலி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, மாகாணசபை உறுப்பினர்களான கே.துரைசாஜசிங்கம், இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார், வவுணதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கா.சுப்பிரமணியம், பிராந்திய நீர்ப்பாசணப் பொறியியலாளர் கே.மோகனதாஸ் விவசாய உதவிப் பணிப்பாளர் பூ.உபநாதன் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள், காப்புறுதித் திணைக்கள அதிகாரிகள் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .