2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களபபில் வீசிய மினி சூறாவளியினால் 197 குடும்பங்கள் பாதிப்பு

Super User   / 2012 மே 08 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேணை மற்றும் வடமுனை ஆகிய கிராமங்களில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் 197 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

இந்த கிராமங்களுக்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.தணபாலசுந்தரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் இன்று செவ்வாய்க்கிழமை சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன் சேத விபரங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

வடமுணை கிராமத்தில் 103 குடும்பங்களும்  ஊத்துச்சேணை கிராமத்தில் 94 குடும்பங்களுமாக 197 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமுனை கிராமத்தில் 29 தற்காலிக வீடுகள் முழுமையாகவும் 65 தற்காலிக வீடுகள் பகுதியாகவும், ஊத்துச்சேணை கிராமத்தில் 17 தற்காலிக வீடுகள் முழுமையாகவும் 26 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், பாடசாலை இந்து ஆலயம் என்பனவும் சேதமடைந்துள்ளதாக உதவி பணிப்பாளர் இன்பராஜன் தெரிவித்தார். இங்கு வீசிய மினி சூறாவளியினால் ஒருவர் காயமடைந்ததுடன் இடம்பெயாந்து பாடசாலையில் தங்கியிருந்த மக்கள் இன்று காலை தமது இருப்பிடங்களுக்கு திரும்பிவிட்டனர்.

இவர்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உதவி பணிப்பாளர் இன்பராஜன் மேலும் தெரிவித்தார்.

மீள் குடியேற்ற கிராமமான இக்கிராமத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் இக்கிராமங்களில் இருந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து ஊத்துச்சேணை அரசினர் தமிழ் கனிஷ்ட பாடசாலையில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .