2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கில் 5 துறைகளின் அபிவிருத்திக்கு ஒத்துழைக்க துருக்கி இணக்கம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்தின் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி, விவசாயம், மீன்பிடித்துறை, கைத்தொழில், தொழில்நுட்பத்துறை ஆகிய ஐந்து துறைகளின் அபிவிருத்திகளுக்கு  பூரண ஒத்துழைப்புகளை வழங்க துருக்கி அரசாங்கம் தயாராக உள்ளது என துருக்கி தூதுவர் இஸ்கெந்தர் கே.ஒக்யாய் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி விடயங்களுடன், உற்பத்திவள ஊக்குவிப்பு அமைச்சின் நாடளாவிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் துருக்கி அரசாங்கத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினூடாக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் உற்பத்திவள ஊக்குவிப்பு அமைச்சரும் இலங்கை துருக்கி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவருமான பசீர் சேகுதாவூதை அவரது இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  சந்தித்த துருக்கித் தூதுவர் அவரது சுகநிலை பற்றியும் விசாரித்தார்.

இதன்போது அபிவிருத்தி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் அமைச்சர் பசீர் சேகுதாவூத், துருக்கித் தூதுவருக்கு விரிவாக கூறியதுடன்  நாடளாவிய ரீதியில் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும்  விரிவாகக் கூறினார்.

துருக்கி விவசாயத்துறையில் முன்னேற்றம் கண்டுள்ளதால் கிழக்கு மாகாணத்திலும் விவசாயத் துறையை முன்னேற்றுவதற்கு உயர் தொழிநுட்ப உதவிகளை வழங்குமாறும் அதேபோன்று படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க உதவுமாறும் இதன்போது அமைச்சர் பசீர் சேகுதாவூத், துருக்கித் தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

இதை மேற்கொள்வதற்கு உற்பத்திவள ஊக்குவிப்பு அமைச்சுக்கு உதவுமெனவும் துருக்கித் தூதுவர் இதன்போது தெரிவித்ததாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உற்பத்திவள ஊக்குவிப்பு அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க துருக்கி அரசாங்கம் தயாராக உள்ள நிலையில், அமைச்சுக்கும் துருக்கி பிரதம மந்திரி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றுக்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு துருக்கித் தூதுவர், அமைச்சர் பசீர் சேகுதாவூதை கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X