2025 மே 03, சனிக்கிழமை

இலங்கையில் 6,000 யானைகள் உள்ளதாக கணக்கீடு: முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

இலங்கையில் 6,000 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகமான யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளன. இதிலும்; வாகரை, தொப்பி;கல ஆகிய பிரதேசங்களிலேயே கூடுதலான யானைகள் உள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இவைகளை கட்டுப்படுத்துவதற்கு தற்போது திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மக்களின் வாழ்விடம் மற்றும் பயிர்ச் செய்கை இடங்களில்  காட்டு யானைகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்  போரதீவுப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை (25)  நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லைகள் உள்ளன. மக்களின் செயற்பாடுகளாலும் கிராமங்களினுள் யானைகளின் வரவு காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்புடன் மின்சார வேலிகள் அமைக்கும் திட்டம்  விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்சார வேலிகளும்  புனரமைக்கப்படவுள்ளன. மேலும், யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த இயற்கையான முறையில் பனை மரங்களையும் நடலாம்.

அத்துடன், கிராமங்களை அண்டிய காட்டுப்பகுதியில் தற்போது தங்கி நிற்கிற காட்டு யானைகளை விரட்டுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யானைகளை கொல்லவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது. அதொரு பெரிய மிருகம். இதனால், வரும் ஆபத்துக்களிலிருந்து  மனிதர்களாகிய நாங்களே தப்பிக்கொள்ள வேண்டும்.

யானைகளை கொண்டுவந்து எமது மக்கள் வாழும் பிரதேசங்களில் விட்டுள்ளதாக தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.  இது   தவறாகும். ஒரு யானை ஒரு நாளைக்கு 60 கிலோமீற்றர் தூரம் நடக்கும். யானைகள் இங்கிருந்து அம்பாறை பிரதேசத்திற்குச் செல்லும். அதுபோல் பொலன்னறுவை பகுதியிலிருந்து எமது பிரதேசங்களுக்கு யானைகள் ஊடுருவும். இந்நிலையில், முற்றுமுழுதாக மட்டக்களப்பு மாவட்டத்தினுள் காட்டு யானைகளின் தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்;கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் வெல்லாவெளி பிரதேசத்திற்கு மாத்திரம் 116 மில்லியன் ரூபா  உட்கட்டுமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கிடைத்துள்ளது. உன்னிச்சை குடிநீர் திட்டத்தை வெல்லாவெளி பிரதேசத்தின் பழுகாமம்வரை கொண்டுவருவதற்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறு குளங்களின் புனரமைப்புக்கென 460 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக அதிகளவான நிதி கிடைக்கின்ற நிலையில்,  அபிருத்திகளும்  நடைபெறுகின்றன.

யானைகளின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க பிரதேச செயலகங்களுக்கு நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  15,000 ரூபா உடனடியாக வழங்கப்படும். குறைந்தது 3 மாதங்களினுள் மக்களுக்கு சகல இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டுமெனச்  சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புக்கள் தேவை. இது அரசியல் பிரச்சினை அல்ல. பொதுவான பிரச்சினையாகும். யானைக்கு கட்சி பேதம் தெரியாது. எக்கட்சியினர் சென்றாலும் யானை தாக்கும். எனவே, அனைவரும் கட்சி பேதங்கள் மறந்து செயற்பட வேண்டும்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X