2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 85,000 மதுபான போத்தல்கள் விற்பனை: அரியம் எம்.பி

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

'இலங்கையிலே அதிகளவான மதுபானசாலைகளை கொண்டுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்வதனால் நாளொன்றிக்கு 85,000 மதுபான போத்தல்கள் இங்கு விற்பனையாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற 'மண்கமழும் மங்கல விழாவின்' இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

'கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பொருளாதாரம் தொடர்ச்சியாக அழிவடைந்து வந்த நிலை தற்போதும் அது தொடர்கின்றது. தற்போது யுத்தம் நடைபெறாவிட்டாலும் வேறொரு விதத்தில் எமது பொருளாதாரம் சிதைக்கப்படுகின்றது.

சமுதாய சீரழிவுகளில் இருந்து எம்மை நாம் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் எமது இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

இந்த வகையில் பட்டிப்பளை கலை, இலக்கிய, சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் சேவை பாராட்டுதலுக்குரியதாகும். கடந்த மூன்று நாட்களாக 'மண்கமழும் மங்கல விழா' எனும் கலாசார நிகழ்வினை இந்த ஒன்றியம் மிகவும் சிறப்பாக நடத்தியிருக்கின்றது.

எமது பாரம்பரிய கலை இலக்கியங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு இனத்தின் வரலாறு என்பது அதனுடைய கலை, கலாசார, விழுமியங்களைப் பொறுத்தே அளவிடப்படுகின்றது.

அத்துடன் இந்த கலாசார நிகழ்வுகள் மின்னியல் அடிப்படையில் கணினி மயப்படுத்தப்படுவதால் காலத்தால் அழியாத ஒரு ஆவணமாக பேணப்படுவதற்கும் இந்த நிகழ்வுகள் உதவுகின்றன. இதற்கு ஊடகத்துறைகளும் முக்கிய பங்காற்றுவதைக் காணலாம்' என்றார்.

பட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கவிஞர் மேகராசா (மேரா) தலைமை நடைபெற்ற இந்நிகழ்வில், கலைஞர்களுக்கு விருதுகளும் கூத்து மற்றும் ஏனைய கலாசார போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற குழுக்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .