2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

‘அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை’

Niroshini   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக அரசாங்கம் விசாரணை செய்து, அவர்களுக்கு என்ன நடந்தது என்ற விவரத்தைப் பெற்றுத்தருவர்கள் என்ற நம்பிக்கை இல்லை. தொடர்ந்தும் ஏமாற்றும் செயற்பாடுகளிலிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது”  என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சரஸ்வதி முதியோர் இல்ல கட்டடத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றுகையிலலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை, 1983ஆம் ஆண்டு முதல் கடந்த 2015 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3,270 பேர், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களை இலங்கை பாதுகாப்புத்தரப்பினர், இந்திய இராணுவம், அரச படையினருடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்கள் ஆகியோர் காணாமல் ஆக்கியுள்ளனர் என, பல ஆணைக்குழுக்களின் விசாரணகளின் முன்னிலையில் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்ட போதிலும், அரச தரப்பினரால் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

"இலங்கை அரச படையினரும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக் குழுக்களும் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 1,552 பேரைக் காணாமல் ஆக்கியுள்ளனர்.

"இந்திய இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செய்றப்பட்ட தமிழ் துணைக்குழுக்களாலும், 165 பேர் வரை காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

"இந்திய இராணுவம் நாட்டை விட்டு சென்ற பின், 1990ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், 1,560 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

"இதேவேளை, கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக மீட்கப்பட்டப் பின்னர், 130க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள். அவர்களில் பலர் செங்கலடி கறுத்தபாலம், கிரான், வாகரை சோதனைச் சாவடிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

"விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களை யார் வெளிநாடுகளுக்கு அனுப்பியது? இறந்திருக்கலாம் என்று கூறுவதாயின் யார் இவர்களைக் கொலை செய்தது? அவர்களது இறந்த சடலங்கள் எங்கே?

"எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக அரசாங்கம், தப்பித்துக்கொள்ளும்  வகையில் பதிலளிக்க கூடாது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X