Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று பல அரசியல்வாதிகளால் சில மாயாஜாலங்கள் கூறப்படுகின்றன. இதற்கெல்லாம் அகப்படாமல் எமது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். ஏனெனில் தங்கமானைக் கண்டு ஏமாந்து போன சீதையின் கதை போல் எமது தமிழர்களின் எதிர்காலம் இருந்து விடக்கூடாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
செங்கலடி, காயான்கேணியில் நேற்று(11) பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது உரிமை ரீதியிலான போராட்டத்தின் நிமித்தம் நாம் இத்தனை காலமும் எதிர்க்கட்சியில் இருந்தோம். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகித்து எமது மக்களுக்கு இதன் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என சேவையாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
கடந்த காலங்களில் தமிழர்கள் வாழ்ந்த பல வரலாற்று இடங்கள் மாற்றப்பட்டு தற்போது பெரும்பான்மை இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் கவலையீனமாக இருந்ததன் காரணத்தினால் எமது பூர்வீக அடையாள இடங்கள் பறிபோய்விட்டன. ஆனால், வடக்கு, கிழக்கு பகுதிகளில் நாம் சற்று அவதானமாக இருந்தமையால் அந்த அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டன என்றே கூற வேண்டும்.
எமக்கு ஒரு பாரிய பலம் இருந்தது அதனை அப்படியே மண்ணில் போட்டு புதைத்து விட்டார்கள். அதனையும் மீறி தற்போது எமது உரிமைகள் தொடர்பில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
தற்போது எம் அனைவராலும் சேர்ந்து ஒரு ஆட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மையின மக்களும் இதில் சிந்தித்துச் செயற்பட்டுள்ளனர். நாம் சற்று நிதானமாக இருந்திருக்காவிட்டால், ஜனநாயக ஆட்சி மறைந்து அரச ஆட்சி என்ற ரீதியில் நாடு சென்று இருக்கும்.
நாம் இந்த மாகாணத்தை ஆட்சி அமைக்க நேர்ந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பதென்பது கடினமான விடயம். அதனால்தான் முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சி அமைக்க நேர்ந்தது.
எமக்கு தெரியும் இந்த மாகாணசபையில் போதுமான அதிகாரங்கள் இல்லை. இருப்பினும் கடந்த காலத்தைப் போலல்லாமல் தற்போதைய அரசாங்கத்தில் மாகாண சபையும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து செயற்படுத்தும் திட்டங்கள் பல ஏற்படுத்துப்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்லாது இத்தனை காலமும் எமது மாவட்டங்களில் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்கும் சகோதர இனத்தவர்களில் ஒருவரே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக இருப்பார். ஆனால் தற்போது எமது கட்சியின் உறுப்பினர்களும் தலைவர்களுள் ஒருவராக நியமிக்கப்படும் காலமாக மாறியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யாது, அவர்களால் எதுவும் முடியாது என்று. அவ்வாறு பேசிப் பேசி எமது மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்கள். தாங்கள் கடந்த தேர்தலின் போது எவ்வாறான நிலையில் இருந்தோம், எவ்வாறு இப்படி வந்தோம், எந்தவகையில் தமது பதவிகளைப் பெற்றோம் என்று உணராதவர்கள் தற்போது வந்து எமது மக்களிடம் பூச்சாண்டி காட்டுகின்றார்கள். இவர்களின் செயற்பாடுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள். இவர்களின் கதைகளெல்லாம் எமது மக்கள் மத்தியில் எடுபடாது.
தற்போது எமது இனத்துக்கு இருக்கும் ஒரே ஒரு பக்கபலம் எமது பிள்ளைகளின் கல்வியே. நாம் அவர்களின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில் எமது இனம் இனிவரும் காலங்களில் கல்வியினால் தான் இருக்கின்ற இருப்பைத் தக்க வைக்க முடியும். எமது பிள்ளைகள் தான் எமது மூலதனம். அவர்களைக் கொண்டுதான் எமது எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago