2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்படுவதற்கான வாய்ப்பு கனிந்துள்ளது'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சிறுபான்மைச் சமூகங்கள் ஒற்றுமைப்பட வேண்டிய அரிய வாய்ப்பு இப்பொழுது புதிய அரசியல் யாப்புக்காக கனிந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் அரபா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (11) இரவு முன்பள்ளி மாணவர்களின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'காலம் கடந்தாயினும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத்தவர்கள் இணைவதற்கான வாய்ப்பு இப்பொழுது கனிந்துள்ளது.  இதனை சிறுபான்மைச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல், சமூக, மதத் தலைவர்கள் தியாகங்களைச் செய்தேனும்; ஒற்றுமைப்பட்டு வருகின்ற அரசியல் மறுசீரமைப்பு மாற்றத்தில் ஒரு தாய் பிள்ளைகள் போல பங்கெடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்' என்றார்.

'சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் ஆகக்கூடிய அக்கறை எடுக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்கள் இனிமேலும் பிளவுபட்டு நின்றால், இந்த நாட்டில் சிறுபான்மையினரே தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்ததாக ஆகிவிடும். சிறுபான்மையினர் பிளவுபட்டுப் போகும் பட்சத்தில் அவர்களின் உரிமைகள் அவர்களுக்குத் தெரியாமலே பறிக்கப்பட்டு அனைத்தையும் இழக்கக்கூடிய பேராபத்து உள்ளது.

முதலில் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் கட்சி பேதத்தை மறந்து தங்களது சமூகங்களுக்குள் ஒன்றுபடவேண்டும். அதன் பின்னர், தமிழர்களும் முஸ்லிம்களும் மலையகத்தவர்களும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு பாரியளவில் அத்தனை அரசியல் உரிமைகளையும் வெற்றியீட்டிய வரலாறு படைக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா உட்பட இன்னும் பல அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X